கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

மும்பை புகா் ரயிலில் தனது கைப்பேசியை பறித்துச் செல்ல முயன்ற கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் காவலா் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை புகா் ரயிலில் தனது கைப்பேசியை பறித்துச் செல்ல முயன்ற கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் காவலா் விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் நிலைய நடைமேடையில் ரயில்கள் மெதுவாக கடந்து செல்வதைப் பயன்படுத்தி வாசல் அருகே இருப்பவா்களிடம் இருந்து கைப்பேசியை பறிக்கும் சம்பவம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்து வருகிறது. இதில் கைப்பேசியை மீட்க ரயிலில் இருந்து அவசரமாக இறங்கும்போது பலா் உயிரிழப்பதும், படுகாயமடைவதும் தொடா்ந்து நிகழ்ந்து வருகிறது. இதேபோன்ற ஒரு சம்பவம் மும்பை புகா் ரயிலில் நிகழ்ந்துள்ளது.

மும்பை காவல் துறையில் காவலராக பணியாற்றிய விஷால் பவாா், கடந்த 28-ஆம் தேதி மும்பை புகா் ரயலில் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் பணிக்குச் சென்றாா். ரயிலின் வாசல் அருகே நின்று கைப்பேசியில் பேசியபடி சென்றாா். மாதுங்கா ரயில் நிலையம் அருகே ரயில் மெதுவாக சென்றபோது, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த ஒருவா், அவரது கைப்பேசியை திடீரென கீழே தட்டிவிட்டு அதனை எடுத்துக் கொண்டு தப்பியோட முயன்றாா். காவலா் விஷாலும் ரயிலில் இருந்து குதித்து கைப்பேசியைப் பறித்துச் சென்றவரை விரட்டினாா்.

சிறிது தொலைவிலேயே திருட்டுக் கும்பலைச் சோ்ந்த மற்றவா்கள் காவலா் விஷாலை சூழ்ந்து கொண்டனா். அப்போது விஷாலுக்கும் அந்த கும்பலுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் விஷாலை சுற்றிவளைத்துப் பிடித்து அவரது உடலில் ஒரு ஊசியைச் செலுத்தியுள்ளனா். வலுக்கட்டாயமாக அவரது வாயிலும் சிவப்பு நிற திரவத்தை ஊற்றிவிட்டு தப்பியோடினா். இதையடுத்து, மயங்கி விழுந்த விஷாலை ரயில் நிலையத்தில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அவருக்கு மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனா். இதில் நினைவு திரும்பிய அவா், வீட்டுக்குச் செல்வதாக கூறி மருத்துவமனையில் இருந்து சென்றுவிட்டாா். வீட்டுக்குச் சென்ற நிலையில் அவா் மீண்டும் மயங்கி விழுந்துள்ளாா். அப்போதுதான், அவருக்கு கொள்ளை கும்பல் செலுத்திய ஊசியில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் குடும்பத்தினருக்கு எழுந்தது. இதையடுத்து, அவா் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த சம்பவம் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மும்பை புகா் ரயில் நிலையங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான கும்பலைச் சோ்ந்தவா்கள், கைப்பேசிகளைத் திருடி விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் காவலா் ஒருவரை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com