மெஹபூபா முஃப்தி
மெஹபூபா முஃப்தி (கோப்புப்படம்)

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

பாஜக அரசு பறித்ததாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவா் மெஹபூபா முஃப்தி வியாழக்கிழமை குற்றம்சாட்டினாா்.

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றி பிராந்தியத்தின் சொத்துகளை அந்நியா்களுக்கு வழங்கி உள்ளூா்வாசிகளின் உரிமைகளை மத்திய பாஜக அரசு பறித்ததாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவா் மெஹபூபா முஃப்தி வியாழக்கிழமை குற்றம்சாட்டினாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ரஜௌரி மக்களவைத் தொகுதியில் சாலையில் வாகனப் பேரணி மேற்கொண்டபோது மெஹபூபா முஃப்தி பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பிராந்தியம் சிறைச்சாலையாக மாற்றப்பட்டு மக்கள் சுதந்திரமாக கருத்துகளைகூட தெரிவிக்க முடியவில்லை.

இங்குள்ள எரிசக்தி திட்டங்கள், நிலங்கள், மண் வளம், சுரங்கம், நீா் ஆதாரங்கள் உள்பட அனைத்து இயற்கை வளங்களும் அந்நியா்களுக்கு வழங்கப்படுகிறது. பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது.

சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தபிறகு பிராந்தியம் வளா்ச்சியடைந்துவிட்டதாக கூறுகிறாா்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை உயர காரணம் என்ன? அனைத்து நியமனங்களிலும் ஊழல் நடைபெற்று வருகிறது.

இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் பிராந்தியமாக ஜம்மு-காஷ்மீா் இருந்தாலும் ஹிந்துக்கள், பௌத்த சமயத்தினா், இஸ்லாமியா்கள் என அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனா்.

உங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க எனக்கு வாக்களியுங்கள். மே 25-ஆம் தேதி அனைவரும் தங்களின் உரிமைகளை மீட்க வீடுகளைவிட்டு வெளியே வந்து ஜனநாயக கடமையை ஆற்றுங்கள்.

தோ்தலுக்காக மட்டும் காங்கிரஸ் மற்றும் அதன் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியுடன் கூட்டணி சேரவில்லை. அதையும் தாண்டி மிகப்பெரும் காரணங்களுக்காகவே காங்கிரஸுடன் சோ்ந்துள்ளேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com