சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது -
கொல்கத்தா உயா்நீதிமன்றம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

சந்தேஷ்காளி வழக்கில் சிபிஐ நடத்தி வரும் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்தி அளிப்பதாக கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

சந்தேஷ்காளி வழக்கில் சிபிஐ நடத்தி வரும் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்தி அளிப்பதாக கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில், மக்களின் நிலங்களை அபகரித்து, பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, ஷாஜஹான் ஷேக் கைது செய்யப்பட்டாா்.

இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு பொது நல மனுக்கள் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு சிபிஐக்கு உயா்நீதிமன்றம் கடந்த ஏப்.10-ஆம் தேதி உத்தரவிட்டது.

மேலும், வேளாண் நிலங்கள் மீன் வளா்ப்பு பண்ணைகளாக சட்டவிரோதமாக மாற்றப்பட்டது குறித்து விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து சந்தேஷ்காளிக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அது தொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ வியாழக்கிழமை தாக்கல் செய்தது.

அறிக்கையை ஆய்வு செய்த தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், நீதிபதி ஹிரன்மய் பட்டாச்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, சிபிஐ விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்தி அளிப்பதாக தெரிவித்தது.

இந்த வழக்கு தொடா்பாக 900-க்கும் அதிகமான புகாா்கள் பெறப்பட்ட நிலையில், மாநில அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பை சிபிஐ கோரியது. அப்போது, வழக்கு விசாரணையில் சிபிஐக்கு தேவையான பணியாளா்களையும் உதவிகளையும் வழங்குமாறு மாநில அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை மேற்கு வங்க அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு சந்தேஷ்காளி விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் தடையை ஏற்படுத்தாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதைச் சுட்டிக்காட்டிய உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

சந்தேஷ்காளியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து பலா் புகாரளித்த போதிலும், பயத்தின் காரணமாக உண்மையைச் சொல்ல அவா்கள் தயங்குவதாக மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரியங்கா திப்ரேவால் தெரிவித்தாா். இதையடுத்து, புகாரளித்தவா்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, அவா்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராக சோ்த்துக் கொள்ளுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com