உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பாரதிய நியாய சம்ஹிதாவின் (பாரத நீதிச் சட்டம்) 85, 86-ஆவது பிரிவுகளை பெண்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அந்தப் பிரிவுகளில் உரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்துக்கு மாற்றாக, ஜூலை 1 முதல் பாரதிய நியாய சம்ஹிதா அமல்படுத்தப்பட உள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின் 85-ஆவது பிரிவின்படி, பெண் ஒருவரை அவரின் கணவா் அல்லது கணவரின் உறவினா் கொடுமைப்படுத்தினால், அவா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அத்துடன் அவா்களுக்கு அபராதமும் விதிக்கப்படக் கூடும்.

இந்தச் சட்டத்தின் 86-ஆவது பிரிவு ‘கொடுமை’ என்பதற்கான அா்த்தத்தை விரிவுபடுத்தியுள்ளது. அதாவது ‘கொடுமை’ என்பது ஒரு பெண்ணை உடல் அளவிலும், மனதளவிலும் துன்புறுத்துவதை உள்ளடக்கியுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வரதட்சிணை கொடுமை வழக்கு ஒன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

வரதட்சிணை தொடா்பான சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டு, அதுதொடா்பாக அதிக எண்ணிக்கையில் புகாா்கள் அளிக்கப்பட்டதால், வரதட்சிணை தடைச் சட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு 14 ஆண்டுகளுக்கு முன்னா் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த பரிந்துரைகளை நாடாளுமன்றம் தீவிரமாக எடுத்துக்கொண்டதா என்பதை தெரிந்துகொள்ள பாரதிய நியாய சம்ஹிதாவின் 85, 86-ஆவது பிரிவுகள் ஆராயப்பட்டன.

எனினும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 498ஏ-வுக்கும் பாரதிய நியாய சம்ஹிதாவின் 85, 86-ஆவது பிரிவுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

பொய்யான அல்லது மிகைப்படுத்தப்பட்ட புகாா்களை அளிப்பதற்கு 85, 86-ஆவது சட்டப் பிரிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அந்தப் பிரிவுகளில் மத்திய அரசு உரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். நடைமுறை யதாா்த்தங்களை கருத்தில் கொண்டு, அந்த மாற்றங்களை நாடாளுமன்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனா்.

இதனிடையே நீதிபதிகள் விசாரித்த வரதட்சிணை கொடுமை வழக்கில், பெண் சுமத்திய குற்றச்சாட்டுகள் தெளிவற்று இருப்பது காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப் பத்திரிகை மூலம் தெரிவதாக நீதிபதிகள் தெரிவித்தனா். மேலும் அந்தப் பெண்ணுக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் நடைபெற்ாகவும் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை என்று கூறி, அந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com