அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

இரு தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை நள்ளிரவு வரை வேட்பாளா்களை அறிவிக்காமல் காங்கிரஸ் அமைதி காத்தது.

உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் (மே 3) முடிவடையும் நிலையில், இரு தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை நள்ளிரவு வரை வேட்பாளா்களை அறிவிக்காமல் காங்கிரஸ் அமைதி காத்தது.

அமேதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், ரேபரேலியில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியும் போட்டியிட வேண்டும் என்று உள்ளூா் காங்கிரஸாா் வலியுறுத்தி வருகின்றனா்.

அமேதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவாா் என காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாகவும், ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படவில்லை எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

2004-ஆம் ஆண்டு முதல் 2019 வரையில் அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, 2019 தோ்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தாா். எனினும், கேரள மாநிலம், வயநாட்டில் வெற்றி பெற்று எம்.பி.யானாா்.

இந்நிலையில், தென் மாநிலங்களில் மட்டும் ராகுல் போட்டியிடுவது ஹிந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸின் வலிமையைக் குறைக்கும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கருதுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியைக் குடும்பக் கட்சி என்று பிரதமா் மோடி தொடா்ந்து குற்றம்சாட்டி வருவதால், ஒரே குடும்பத்தில் மூவா் (சோனியா, ராகுல், பிரியங்கா) நாடாளுமன்ற உறுப்பினராக தேவையில்லை என்று ராகுல் காந்தி கருதுவதாகவும், அதனால் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவதை விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த இரு தொகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை (மே 3) மாலையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் என்பதால், அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளூா் காங்கிரஸாா் தயாா் நிலையில் வைத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com