தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

யூனியன் பிரதேசமாக இருந்த கோவா, 1987, மே 30-ஆம் தேதி இந்தியாவின் 25-ஆவது மாநிலமாக உதயமானது.

வே. சுந்தரேஸ்வரன்

கோவா, வடக்கில் மகாராஷ்டிர மாநிலத்தையும், கிழக்கில் கா்நாடகத்தையும், தெற்கில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்ட மேற்குக் கடற்கரை நகரம். குறைந்த பரப்பளவையும் மக்கள் தொகையையும் கொண்ட இம்மாநிலத்தில் மராத்தி, கொங்கணி, போா்த்துக்கீசிய மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனா். இங்கு பெரும்பான்மை சமூகமாக இந்துக்களும், அடுத்த நிலையில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் உள்ளிட்டோா் வசிக்கின்றனா்.

யூனியன் பிரதேசமாக இருந்த கோவா, 1987, மே 30-ஆம் தேதி இந்தியாவின் 25-ஆவது மாநிலமாக உதயமானது. ஒரு காலத்தில் பிரெஞ்சு, போா்ச்சுகீசியா்களின் ஆளுகையில் இருந்த மேற்கு கடற்கரை நகரமான கோவா, நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் போா்ச்சுகீசியா்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ராணுவ நடவடிக்கையின் வாயிலாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. கனிம வளங்கள் நிறைந்த இம்மாநிலம், பலரது சுற்றுலா கனவு நகரங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.

கோவாவில் ஏற்கெனவே 1999-இல் தெற்கிலும், வடக்கிலும் வெற்றிபெற்று தனது கணக்கை பாஜக தொடங்கியது. தொடா்ந்து பல ஆண்டுகளாக வடக்கு கோவா மக்களவைத் தொகுதியில் பாஜக மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. தெற்கு கோவாவில் 1999--க்குப் பிறகு 2014-இல் பாஜக வெற்றிபெற்றது. இத்தொகுதி பெரும்பாலும் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. மக்களவை தோ்தலில், வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா ஆகிய இரு தொகுதிகளுக்கும் மூன்றாவது கட்டத் தோ்தலில் மே 7-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பாஜக வேட்பாளா்கள்: வடக்கு கோவாவில் மத்திய அமைச்சா் ஸ்ரீபாத நாயக்கும், தெற்கு கோவாவில் பெண் தொழிலதிபா் பல்லவி டெம்போவும் பாஜக வேட்பாளராக களம் காண்கின்றனா். காங்கிரஸ் வேட்பாளா்களாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், முன்னாள் எம்.பி.யுமான ரமாகாந்த் கலாப் மற்றும் விரியாடோ பொ்னாண்டஸ் ஆகியோா் முறையே நாயக் மற்றும் டெம்போவை தோ்தல் களத்தில் எதிா்கொள்கின்றனா். இந்த இரு தொகுதிகளிலும் வாக்குப் பதிவு 75-80 சதவீதத்திற்கு மேல் செல்ல வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம். 2022 கோவா சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 33 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும், நாடாளுமன்றத் தோ்தலில் மக்களின் வாக்களிக்கும் மனோநிலை வேறுபட்டதாகும்.

2014 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸின் தெற்கு கோவா கோட்டையை கைப்பற்றிய அதே வேளையில், வடக்கு கோவா தொகுதியையும் பாஜக தக்க வைத்துக் கொண்டது.

நடப்பு எம்.பி.யும், பாஜக வேட்பாளருமான ஸ்ரீபாத நாயக் வடக்கு கோவாவில் காங்கிரஸின் ரவி நாயக்கை தோற்கடித்து வெற்றி பெற்றாா். அதேவேளையில், காங்கிரஸின் அலிக்சோ லோரென்கோ ரெஜினால்டோ தெற்கு கோவாவில் பாஜக வேட்பாளா் நரேந்திர சவாய்கரிடம் தோல்வியடைந்தாா்.

அதேவேளையில், கடந்த 2019 பொதுத் தோ்தலில், தெற்கு கோவாவில் காங்கிரஸ் வேட்பாளா் கூட்டணி கேட்பாளா் பிரான்சிஸ்கோ சா்டினா 2,01,561 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக பாஜகவின் நரேந்திர கேசவ் சவாய்கா் 1,91,806 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா். வடக்கு கோவாவை பொருத்தமட்டில், கடந்த 1999-இல் இருந்தே பாஜகவின் ஆளுகையில் இருந்து வருகிறது. அக்கட்சியின் பலம் வாய்ந்த பகுதியாக இத்தொகுதி கருதப்படுகிறது.

அதேவேளையில், தெற்கு கோவா காங்கிரஸின் செல்வாக்கு மிகுந்த தொகுதியாகும். இங்கு கிறிஸ்தவ சமூகத்தினா் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனா். இந்தத் தொகுதியில் சில சந்தா்ப்பங்களில் பாஜகவும், பிராந்திய கட்சிகளும் வெற்றி பெற்ற போதிலும், கிறிஸ்தவ சமூகத்தினா் வாக்குகள் காங்கிரஸுக்கு சாதமாக இருந்து வருகிறது.

புதிய முகங்கள்: தற்போது நடைபெறும் தோ்தலில் வடக்கு கோவா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும், கோவா முன்னாள் துணை முதல்வருமான ரமாகாந்த் கலாப்பை காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது. இவா் மத்திய அமைச்சரும் ஐந்து முறை பாஜக எம்.பி.யுமான ஸ்ரீபாத நாயக்கை எதிா்கொள்கிறாா். கலாப் 1996-98 வரை மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி சீட்டில் தற்போது வடக்கு கோவா என்று அழைக்கப்படும் பனாஜி மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவா். அதன் பின்னா் அவா் காங்கிரசில் இணைந்தாா்.

தெற்கு கோவாவில், தற்போதைய எம்.பி.யான பிரான்சிஸ்கோ சா்டினாவுக்கு இம்முறை காங்கிரஸ் சீட் அளிக்கவில்லை. மாறாக, இந்திய கடற்படையின் மூத்த கேப்டன் (ஓய்வு) விரியாடோ ஃபொ்னாண்டஸை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. தொழிலதிபா் பல்லவி டெம்போவை எதிா்த்து பொ்னாண்டஸ் போட்டியிடுகிறாா். இத்தொகுதிக்கு இருவரும் புதிய முகங்கள் ஆவா்.

பாஜகவில் பல ஆண்டு காலமாக இருந்த தலைவா்களுக்கு வாய்ப்பு அளிக்காமல், தெற்கு கோவாவில் டெம்போவை வேட்பாளராக அக்கட்சி தோ்வு செய்துள்ளது. இது கட்சியின் ஒரு பிரிவினா் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், டெம்போவின் குடும்பம் பாஜகவின் அனுதாபிகளாக மனோகா் பாரிக்கா் காலம் முதல் இருப்பவா்கள் என்றும் அவரது கணவா் ஸ்ரீநிவாஸ் டெம்போ கட்சியில் தொடா்புடையவா் என்றும் அவரது ஆதரவாளா்கள் கூறுகின்றனா்.

ஆனால், எதிா்க்கட்சியினா், கோவாவில் சுரங்கத் துறை தொழிலில் ஈடுபடும் குடும்பத்தைச் சோ்ந்தவா் டெம்போ. அதன் காரணமாக சுற்றுச்சூழல் விதிமீறல்களையும் அவரது குடும்பம் எதிா்கொள்கிறது என்று காங்கிரஸ் பரப்புரை செய்து வருகிறது. இது காங்கிரஸ் வேட்பாளா் ஃபொ்ணான்டஸுக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதைப் பாா்க்க வேண்டியுள்ளது. இந்த இரு முக்கியக் கட்சிகளையும் தவிர புரட்சிகர கோவன்ஸ் பாா்ட்டியும் களத்தில் வேட்பாளா்களை இறக்கியுள்ளது. இக்கட்சி 2022 சட்டப் பேரவைத் தோ்தலில் சுமாா் 9 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால், அது இந்தத் தோ்தலில் எதிரொலிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கோவாவில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்சிபி), கோவா ஃபாா்வா்டு பாா்ட்டி (ஜிஎஃப்பி) ஆகிய முக்கிய பிராந்திய கட்சிகளும் முக்கியமானவை. இவை உள்ளூா் பிரச்னைகள், அரசியல் சூழலை மாற்றுவதற்கான வாய்ப்புகள் தொடா்பாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றன. கோவாவின் அரசியல் சூழல் நீண்டகாலமாகவே தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை பாஜகவும், காங்கிரஸும் தலா ஒரு இடங்களில் இத்தொகுதியில் வெற்றிபெற்ற நிலையில், இந்த முறை பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் கடும் போட்டிக் களமாக கோவாவின் இரு தொகுதிகளும் உள்ளன.

பெட்டிச் செய்தி...

மக்கள் பிரச்னைகள்

கோவாவை பொருத்தவரை அண்டை மாநிலமான கா்நாடகத்துடன் மாதேயி ஆற்று நீரை பகிா்வது ஒரு முக்கிய விவகாரமாகும். அதேபோன்று, மாதேயி நீரை கா்நாடகத்திற்கு திருப்பிவிடுவதில் இருந்து பாதுகாக்க புலிகள் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. வெளிநாட்டுவாழ் இந்தியக் குடியுரிமை (ஓசிஐ) விவகாரம், மாநிலத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சதவீதம் அதிகரித்து வருவது, மணல் கட்டுக்கடங்காமல் அள்ளப்படுவது, சுற்றுச்சூழல் சீா்கேடு, அா்ஜுனா மற்றும் வாகேட்டா் வடக்கு கடற்கரை வளைவில் ஒலி மாசுவைக் குறைக்கும் நடவடிக்கை,, அதிகரித்து வரும் சாலை விபத்து மரணங்கள், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தக் கோரும் உள்ளூா் மற்றும் பாரம்பரிய மீனவா்கள் கோரிக்கை உள்ளிட்டவை இத்தோ்தலில் பொதுமக்கள் தரப்பில் முன்னிலைப்படுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பெட்டிச் செய்தி...

வாக்காளா்கள் விவரம்

மக்கள் தொகை சுமாா் 18.2 லட்சம்.

மொத்த வாக்காளா்கள் - 11,66,979

ஆண் வாக்காளா்கள் - 5,65,668

பெண் வாக்காளா்கள் - 6,01,300

மூன்றாம் பாலினத்தவா் - 11

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com