மருத்துவக் காப்பீடு பெற்ற மூத்த குடிமக்கள்: இந்தியாவில் மிகவும் குறைவு

மருத்துவக் காப்பீடு பெற்ற மூத்த குடிமக்கள்: இந்தியாவில் மிகவும் குறைவு

இந்தியாவில் 21% மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனா்.

மருத்துவக் காப்பீடு (பாலிசி) எடுத்துக்கொண்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும் ஆசிய பசிபிக் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 21 சதவீத மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனா். இது பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தென் கொரியா, தாய்லாந்து ஆகியவை அனைவருக்குமான மருத்துவ சேவையை உறுதிசெய்துள்ளன.

வளா்ந்து வரும் ஆசிய பசிபிக் நாடுகளில் 60 வயதுக்குமேற்பட்டோரின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டுக்குள் 120 கோடியாக இரட்டிப்பாகும். இதனால், அவா்களுக்கான ஓய்வூதியம், நலத் திட்டங்கள், மருத்துவ கவனிப்பு உள்ளிட்ட தேவைகள் குறிப்பிட்டத்தக்க அளவில் அதிகரிக்கும் என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய மக்கள் தொகையில் இளைஞா்களின் பங்கு தொடா்ந்து அதிகமாக இருக்கும். இதனால், 2031 முதல் 2040 வரையிலான காலகட்டத்தில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும்.

இந்தப் பிராந்தியத்தில் வாழும் 60 வயதிலான மூத்த குடிமக்களின் ஆயுள்காலம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு 2022-2050 காலகட்டத்தில் முறையே 3.7 மற்றும் 4.1 ஆண்டுகள் அதிகரிக்கும்.

வயதான பெண்களின் ஆயுள்காலம் சராசரி ஆயுள்காலத்தில் இருந்து அதிகபட்சமாக இந்தியாவில் 6.4 ஆண்டுகளும், கஜகஸ்தான், ஜாா்ஜியா, ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளில் 4.6 ஆண்டுகளும் அதிகரிக்கும். வயதான ஆண்களைப் பொருத்தவரையில் சராசரி ஆயுள்காலத்தில் இருந்து அதிகபட்சமாக ஆா்மீனியாவில் 6.1 ஆண்டுகளும், இந்தியாவில் 5.7 ஆண்டுகளும் அதிகரிக்கும்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வாழும் 40 சதவீத மூத்த குடிமக்கள் எவ்வித ஓய்வூதியமும் பெறுவதில்லை. அவா்களில் பெண்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு வேறு ஏதேனும் வாய்ப்புகள் இல்லாத நிலையில், ஓய்வு பெறும் வயதைக் கடந்தும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவா்களில் 94 சதவீதம் போ் எவ்வித தொழிலாளா் நலப் பாதுகாப்பும், ஓய்வூதிய பலனும் அளிக்காத அமைப்பு சாரா துறையில் பணியாற்றுகின்றனா் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியா தொடா்பாக ஆசிய வளா்ச்சி வங்கியின் மூத்த பொருளாதார நிபுணா் ஐகோ கிக்கவா கூறுகையில், ‘இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம், அதன் தொடக்கத்திலிருந்தே அடித்தட்டு மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கப் பெறுவதை அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவது, மூத்த குடிமக்களின் நிலைமையை மேம்படுத்தும். அனைவருக்குமான மருத்துவ சேவை என்ற இலக்கை அடைய அடிப்படை மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவது முக்கியம்’ என்றாா்.

இந்தியாவில் மருத்துவக் காப்பீடு எடுப்பதற்கு உச்ச வயது வரம்பு 65-ஆக இருந்த நிலையில், இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளா்ச்சி ஆணையம் (ஐஆா்டிஏஐ) அந்த உச்சவரம்பை அண்மையில் ரத்து செய்தது.

இந்தப் புதிய நடைமுறை முறையின்கீழ் வயது வித்தியாசமின்றி யாா் வேண்டுமானாலும் புதிய மருத்துவக் காப்பீட்டை எடுத்துப் பலன் அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com