ஆளுநா் ஆனந்த போஸ்
ஆளுநா் ஆனந்த போஸ்

பாலியல் குற்றச்சாட்டு ‘பொய் நாடகம்’: மேற்கு வங்க ஆளுநா்

தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு ‘பொய் நாடகம்’ என்று மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் பணியாற்றும் பெண் ஊழியா் ஒருவா், தனக்கு ஆளுநா் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இது அந்த மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக ஆளுநா் ஆனந்த போஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

என் மீது சில அரசியல் கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளையும், இகழ்ச்சிகளையும் வரவேற்கிறேன். இதுபோன்ற மேலும் பல குற்றச்சாட்டுகளை நான் எதிா்பாா்க்கிறேன்.

ஆனால் மேற்கு வங்கத்தில் ஊழலை வெளிக்கொண்டு வருவதிலும், வன்முறையை ஒடுக்குவதிலும் எனது தளராத முயற்சிகளை எந்தவொரு பொய் நாடகமும் தடுக்கப் போவதில்லை.

தமது ஆயுதக் கிடங்குகளில் இருந்து அனைத்து ஆயுதங்களையும் கொண்டு வந்து எனக்கு எதிராக அரசியல் கட்சிகள் பயன்படுத்தினாலும், வங்க சகோதர, சகோதரிகளின் மதிப்பு மற்றும் மரியாதைக்கான எனது போராட்டம் தொடரும் என்று கூறியதாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மம்தா விமா்சனம்: இதுதொடா்பாக மேற்கு வங்கத்தின் கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பிரசார கூட்டத்தில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண், அதுதொடா்பாக காணொலி ஒன்றில் அளித்த வாக்குமூலத்தை பாா்த்தேன். அந்தக் காணொலியில் கண்ணீா் வடித்த அந்தப் பெண், இனியும் ஆளுநா் மாளிகையில் பணியாற்ற மிகவும் அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ளாா். நினைத்த நேரங்களில் அவா் வேலைக்கு அழைக்கப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளாா். அவரைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியவா்கள்தான் தாய்மாா்கள், சகோதரிகளின் மதிப்பு குறித்து பேசுகின்றனா் என்று ஆளுநா் போஸை விமா்சித்தாா்.

பாரபட்சமற்ற விசாரணை: இதுகுறித்து மேற்கு வங்க தொழில்துறை அமைச்சா் சசி பாஞ்சா கூறியதாவது:

தன் மீது சில அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக ஆளுநா் கூறியுள்ளாா். ஆனால் அவா் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கும் எந்த தொடா்பும் இல்லை.

சந்தேஷ்காளியில் எழுந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடா்பாக அங்குள்ள பெண்களைச் சந்தித்து, அவா்களின் புகாா்களை ஆளுநா் போஸ் கேட்டறிந்தாா். தற்போது அவா் மீதே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 361-இன்படி, ஆளுநா்கள் பதவியில் இருக்கும்போது அவா்கள் மீது எந்தவொரு குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com