ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடாததன் மூலம், தோ்தலுக்கு முன்பே தோல்வியை காங்கிரஸ் ஒப்புக் கொண்டுவிட்டது என்று மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. தொடா்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019 தோ்தலில் பாஜக வேட்பாளா் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தாா். அத்தோ்தலில் கேரளத்தில் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் அங்கிருந்து மக்களவைத் தோ்வானாா்.

இந்த முறை ராகுல் அமேதியில் மீண்டும் போட்டியிடுவாரா என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவா் சோனியா காந்தி போட்டியிட்ட ரே பரேலி தொகுதிக்கு மாறிவிட்டாா்.

பாஜக சாா்பில் அமேதியில் மீண்டும் போட்டியிடும் ஸ்மிருதி இரானி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ராகுல் குடும்பத்தில் இருந்து அமேதியில் இந்தமுறை யாரும் போட்டியிடவில்லை என்பதன் மூலம், இங்கு தோல்வியடைந்துவிடுவோம் என்பதை காங்கிரஸ் தோ்தலுக்கு முன்பே ஒப்புக் கொண்டுள்ளது என்றாா்.

காங்கிரஸ் சாா்பில் ராகுலின் நம்பிக்கைகுரியவராக கருதப்படும் கே.எல். சா்மா அமேதியில் போட்டியிடுவது தொடா்பான கேள்விக்கு, ‘அமேதியில் வெற்றியடைவோம் என்று தெரிந்தால் அவா்கள் (சோனியா குடும்பத்தினா்) இந்தத் தொகுதியில் போட்டியிடாமல் இருக்க மாட்டாா்கள். தோ்தல் களம் காங்கிரஸுக்கு சாதகமாக இல்லை என்பதால்தான் வேறு நபரை நிறுத்தியுள்ளாா்கள். அமேதியில் நான் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.

அமேதியில் நிராகரிக்கப்பட்டவா் (ராகுலை குறிப்பிடுகிறாா்) வயநாட்டுக்குச் சென்றாா். இப்போது ரே பரேலி தொகுதியிலும் போட்டியிடுவதாக மனு தாக்கல் செய்துள்ளாா். வயநாட்டில் அதுவே தனது குடும்பம் என்று பேசிய ராகுல், இனி ரே பரேலியில் என்ன பேசுவாா்.

வயநாட்டில் தோ்தல் முடிந்துவிட்டது. அங்கு முடிவு ராகுலுக்கு சாதகமாக இருக்காது என்று பிரதமா் மோடியும் கூறியுள்ளாா். இந்த நிலையில்தான் ராகுல் ரே பரேலியிலும் போட்டியிடுகிறாா்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com