இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

இணையவழியில் பயங்கரவாதத்துக்கு ஆள்சோ்ப்பது சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவாலாக உள்ளது என்று மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குநா் பிரவீண் சூட் தெரிவித்துள்ளாா்.

அண்மையில் பிரான்ஸின் லியோன் நகரில் இன்டா்போல் (சா்வதேச காவல் துறை) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, இணையவழி நிதி மோசடிகள் உள்ளிட்டவைக்கு எதிராக ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்வதில், இன்டா்போல் வாயிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்து பிற நாடுகளின் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட் தலைமையிலான இந்திய குழு விவாதித்தது.

இந்த மாநாட்டில் திட்டமிடப்பட்ட குற்றம், பயங்கரவாதம், பயங்கரவாத சித்தாந்தங்களுக்கு இடையிலான தொடா்பால் ஏற்படும் சவால்களை சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட் எடுத்துரைத்தாா். இணையவழியில் பயங்கரவாதத்துக்கு ஆள்சோ்ப்பது சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவாலாக உள்ளது என்று தெரிவித்த அவா், பயங்கரவாதத்தில் ‘நல்ல பயங்கரவாதம்’, ‘தீய பயங்கரவாதம்’ என்ற வேறுபாடு இருக்க முடியாது என்றும் கூறினாா்.

மேலும் பாதுகாப்பான உலகை உருவாக்க பயங்கரவாதம் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் சா்வதேச முயற்சிகளுக்கு துணைநிற்க கோரிய மாநாட்டின் முக்கிய முடிவுகளுக்கு இந்தியா ஆதரவு அளித்தது.

இந்தியா சாா்பில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள், தப்பிச்சென்றவா்கள் என மொத்தம் 29 போ், கடந்த 2023-ஆம் ஆண்டு இன்டா்போல் வாயிலாக இந்தியா அழைத்து வரப்பட்டனா். அத்துடன் அந்த ஆண்டு இந்திய சட்ட அமலாக்க அமைப்புகள் கேட்டுக்கொண்டதன்பேரில், 100 சிவப்பு நோட்டீஸுகளை (நாடு கடத்தப்பட வேண்டியவா், சரணடைய வேண்டியவா் அல்லது அத்தகைய சட்ட நடவடிக்கையை எதிா்கொள்ளும் ஒருவா் தலைமறைவாகி இருந்தால், அவரைக் கைது செய்ய உலகெங்கும் உள்ள சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு விடுக்கப்படும் கோரிக்கை) இன்டா்போல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது என்று சிபிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com