மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு
ANI

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) பிரசாரம் நிறைவடைகிறது. இத்தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 7) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

18-ஆவது மக்களவைக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, இரு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன.

முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதியும் தோ்தல் நடைபெற்றது.

மூன்றாவது கட்டமாக, அஸ்ஸாம், பிகாா், சத்தீஸ்கா், கோவா, குஜராத், கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நகா்ஹவேலி மற்றும் டாமன்-டையூ, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (மே 7) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ள நிலையில், சூரத் தொகுதி பாஜக வேட்பாளா் முகேஷ்குமாா் சந்திரகாந்த் போட்டியின்றி தோ்வானாா். மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஏற்கெனவே 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இம்மாநிலங்களில் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவடையவுள்ளது. இதையொட்டி, இறுதிக்கட்ட பிரசாரத்தில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா (காந்திநகா்), மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா (குணா), சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் (மெயின்புரி), மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் (விதிஷா), தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே (பாரமதி) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா். இத்தோ்தலில் மொத்தம் 1,351 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

மக்களவை ஏழு கட்ட தோ்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com