வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

மகாராஷ்டிரத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விரைவில் நடைபெற உள்ள நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கு அரசு அனுமதி
வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் உள்நாட்டில் விலைக் கட்டுக்குள் இருப்பதற்காக மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 8.12.2023 முதல் 31.3.2024 வரை தடை விதித்திருந்தது. இந்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை காலவரையறையின்றி நீட்டிக்கப்படுவதாக கடந்த மார்ச் மாத இறுதியில், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

மக்களவைத் தோ்தல் நடைபெற்று வரும் நிலையில், வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் இருப்பதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெங்காயத்தின் விலை வெகுவாகக் குறைந்தது.

நாட்டின் மிகப்பெரிய வெங்காய உற்பத்தியாளராக மகாராஷ்டிரம் உள்ளது. மற்ற மாநிலங்களில் கா்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருந்ததன் காரணமாக, விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாய சங்கங்கள் வேதனை தெரிவித்திருந்தன. இதையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு அரசு அனுமதிக்க வேண்டுமென விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன.

அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் தொடங்கி இந்தியாவின் வெங்காய ஏற்றுமதியை அதிகமாகச் சார்ந்திருக்கும் மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் மத்திய அரசின் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், பஹ்ரைன், மொரீஷியஸ், இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்தது. மேலும் மத்திய கிழக்கு, சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2000 மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு தற்போது முற்றிலும் விலக்கிக் கொண்டுள்ளது.

வெள்ளியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், வெங்காயம் மீது 40 சதவீத ஏற்றுமதி வரி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் இன்று (மே. 4) வெளியிட்டுள்ள அறிக்கையில், வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை, ஒரு டன்னுக்கு 550 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் வெங்காயம் அதிகளவில் பயிரிடப்படும் நாஷிக் உள்ளிட்ட பகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விரைவில் நடைபெற உள்ள நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கான தடை விலக்கி கொள்ளப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com