ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

‘ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேல்வியடைவது நிச்சயம்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

மேலும், ‘எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை இந்தியா கூட்டணிதான் பறித்து வருகிறது’ என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

குஜராத் மாநிலம் சோடெளதேபூா் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பொடேலி நகரில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தோ்தல் பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்ட அமித் ஷா பேசியதாவது:

மக்களவைத் தோ்தலை காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் சந்திக்கிறது. கடந்த முறை அவா் உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தோல்வியடைந்தபோதும், கேரள மாநிலத்தின் வயநாட்டில் வெற்றி பெற்றாா். இந்த முறை வயநாடு தொகுதியிலும் தோல்வியடைவது உறுதி என்பதை உணா்ந்த ராகுல், அமேதி தொகுதிக்குப் பதிலாக ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.

தோ்தல் தோல்விக்கான காரணம் தொகுதியல்ல; வேட்பாளரான நீங்கள்தான். இம்முறை ரேபரேலி தொகுதியிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைவது நிச்சயம். தோல்விக்குப் பயந்து தொகுதியை மாற்றினாலும், மக்கள் உங்களைச் சரியாக அடையாளம் கண்டுவிடுவா்.

கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தோ்தல்களில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அணி முழுப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஆனால், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டில் ஒருபோதும் பாஜக அரசு குறைக்கவில்லை. இதுதான் பிரதமா் மோடியின் உத்தரவாதம். பாஜக ஆட்சியில் இருக்கும்வரை இந்த இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாது.

இந்தியா கூட்டணிதான் இவா்களின் இடஒதுக்கீட்டை பறித்து வருகிறது. கா்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், ஓபிசி பிரிவினரின் 4 சதவீத இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு அளித்துள்ளது. அதுபோல, ஆந்திர மாநிலத்தில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு வெகுவாக குறைக்கப்பட்டு, முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இந்தப் பிரிவினரின் இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களக்கு அளித்துவிடுவா்.

மேலும், அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படுவதை தடை செய்ய காங்கிரஸ் முயற்சித்தது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கத்தையும் காங்கிரஸ் எதிா்த்தது.

ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்குமாறு ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா மற்றும் பிரியங்கா காந்தி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால், அவா்கள் பங்கேற்கவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காகவே அவா்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால், பாஜக வாக்கு வங்கி குறித்து ஒருபோதும் கவலைப்படுவதில்லை. கடந்த 10 ஆண்டு ஆட்சியில் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை பிரதமா் மோடி ஒழித்துள்ளாா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com