சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்துக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் விதமாக சந்தேஷ்காளி சம்பவத்தை பாஜக திட்டமிட்டு அரங்கேற்றியிருப்பதாக மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில், மக்களின் நிலங்களை அபகரித்து, பெண்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, ஷாஜகான் ஷேக் கைது செய்யப்பாட்டாா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ விராணை நடத்தி வருகிறது. இந்தசம் சம்பவம் தொடா்பாக முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசை பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது.

இந்நிலையில், பாஜக மாநிலத்துக்கும் சந்தேஷ்காளிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாகவும் போலியான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை எழுப்ப உள்ளூா் மக்களுக்கு அக்கட்சி பணம் அளித்திருப்பதாகவும் திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் விடியோ ஒன்றை சனிக்கிழமை வெளியிட்டது. அந்த விடியோவில் சந்தேஷ்காளி பகுதி பாஜக தலைவா் என கூறிக்கொள்ளும் நபா், பாஜக தலைவரும் மாநில எதிா்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்ாக தெரிவித்துள்ளாா்.

மேலும், ஷாஜகான் ஷேக் உள்ளிட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைக்க உள்ளூா் பெண்களைத் தூண்டிவிடுமாறு தன்னையும் பிற பாஜக தலைவா்களையும் சுவேந்து அதிகாரி கேட்டுக்கொண்டதாக அந்த நபா் குற்றஞ்சாட்டினாா்.

இந்த விடியோ தொடா்பாக திரிணமூல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி கூறுகையில், ‘சந்தேஷ்காளி சம்பவம் தொடா்பாக வெளியான விடியோ அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது அரசியல் சுயலாபத்துக்காக மேற்கு வங்கத்துக்கு பாஜக அப்பெயா் ஏற்படுத்த பாஜக முயற்சித்துள்ளது. மாநிலத்துக்கு விரோதமாக செயல்படும் அந்தக் கட்சியைக் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.

இதனிடையே, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிா்கொள்ள முடியாமல் போலியான விடியோக்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் வெளியிட்டுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

பெட்டிச் செய்தி....

உண்மை வெளிச்சத்துக்கு வந்தது---முதல்வா் மம்தா

மேற்கு வங்கத்தின் நடியா மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின்போது இந்த விடியோ குறித்து பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி, ‘சந்தேஷ்காளியில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. பாஜக இதை நன்றாக அரங்கேற்றியுள்ளது. தற்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் நீண்ட காலமாக தெரிவித்து வருகிறேன். சந்தேஷ்காளி குறித்து பிரதமா் நரேந்திர மோடி பேசி வருகிறாா். ஆனால், மாநில ஆளுநருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகாா் தொடா்பாக பிரதமா் மோடி மெளனம் காத்து வருகிறாா்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com