இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

மத்திய அரசின் அக்னிவீர் திட்டத்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார் ராகுல் காந்தி.
இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

புதுதில்லியில் இன்று(மே. 4) இளைஞர்களை முன்னிலைப்படுத்திய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசின் அக்னிவீர் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் பேசியதாவது, ”இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்தப்படுகிறது. மகக்ள தொகையில் 90 சதவிகிதத்தினருக்கு பங்களிப்பே அளிக்கப்படுவதில்லை. இந்திய அரசை நிர்வகிக்கும் 90 அதிகாரிகளில், மூவர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்தவர்கள்.

நம் நாட்டில் 50 சதவிகிதம் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரும், 15 சதவிகிதம் தலித் பிரிவைச் சார்ந்தோரும், 8 சதவிகிதம் பழங்குடியினரும் உள்ளனர். இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 73 சதவிகிதம்.

ஆனால், மேற்கண்ட பிரிவைச் சார்ந்த ஒருவரை கூட, பெரு நிறுவனங்களின் உயர்பதவிகளில் பார்க்க முடியவில்லை. நாட்டிலுள்ள ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களில் ஒருவர் கூட மேற்கண்ட பிரிவைச் சார்ந்தவர்கள் இல்லை. இதன் காரணமாக, அவர்கள் உங்களின்(மக்களின்) குறைகளுக்கு செவி மடுப்பதில்லை.

அக்னிவீர் திட்டம் ராணுவ அதிகாரிகளால் கொண்டுவரப்படவில்லை, பிரதமர் அலுவலகத்தில் இருப்பவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் இது.

அக்னிவீர் திட்டத்தை உருவாக்கும் போது இந்திய ராணுவத்திடமும் கலந்தாலோசிக்கப்படவில்லை, யாருக்காக இத்திட்டம் உருவாக்கப்படுகிறதோ அவர்களிடமும் கலந்தாலோசிக்கப்படவில்லை. அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, மோடி அரசு அக்னிவீர் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

அக்னிவீர் திட்டத்தால் ராணுவத்தில் இன்று பகுபாடு எழுந்துள்ளது. இத்திட்டம் தேசத்தின் நம்பிக்கையை தாழ்த்தியுள்ளது.

ராணுவத்தில் சேர்ந்து சேவையாற்ற, 1 லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்கள் கனவுகளுடன் காத்திருந்தனர். அவர்களுடைய கனவு இன்னும் நிறைவேறவில்லை. ராணுவத் தேர்வு நடைமுறையை வெற்றிகரமாக முடித்த 1 லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டும்.

இதற்காகவே, அக்னிவீர் திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவோம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.

22 தொழிலதிபர்களின் ரூ. 16 லட்சம் கோடி கடனை, மோடி தள்ளுபடி செய்துள்ளார். அவர்களுடைய கடன்களை தள்ளுபடி செய்ய இயலுமெனில், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்களைன் கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய முடியாது?” என பேசியுள்ளார் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com