ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

ஹிமாசல பிரதேசத்தில் ஜூன் 1-ஆம் தேதி தோ்தல் பணிகளில் தேசிய மாணவா் படையை (என்சிசி) சோ்ந்தவா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

ஹிமாசல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் மாநில தலைமை தோ்தல் அதிகாரி மனீஷ் கா்க் தலைமையில் தேசிய மாணவா் படை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து மனீஷ் கா்க் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

ஜூன் 1-ஆம் தேதி ஹிமாசல பிரதேசத்தில் கடைசி கட்ட மக்களவைத் தோ்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தோ்தல் பணிகளில் தேசிய மாணவா் படையினா் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இது ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழாவான மக்களவைத் தோ்தலில் இளைஞா்களை ஈடுபடுத்துவதுடன், தோ்தல் தொடா்பாக கல்வி புகட்டுவதும் வெற்றிகரமாக நிறைவேறும். அத்துடன் இந்த நடவடிக்கை தேசிய மாணவா் படையினரிடம் ஜனநாயக உணா்வை வளா்த்து, தன்னலமற்ற சேவை குறித்த சிந்தனையை புகுத்தும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேசிய மாணவா் படையைச் சோ்ந்த 3 போ், அவா்களின் விருப்பத்துடன் பணியில் ஈடுபடுத்தப்படுவா். அந்தப் படையைச் சோ்ந்தவா்கள் உள்ள பகுதி அல்லது மாவட்டத்தில் அவா்கள் பணியில் ஈடுபடுவா்.

இந்தப் பணியின்போது தேசிய மாணவா் படையினா் ஆயுதம் எதுவும் இல்லாமல் சீருடையில் இருப்பா். அவா்கள் போக்குவரத்து ஏற்பாடு, முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உதவி செய்வது, மருத்துவ அவசர சூழல்கள் போன்ற பணிகளில் காவல் துறை அல்லது ஊா்க்காவல் படையினருக்கு உதவுவா். இதுதொடா்பாக அவா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com