வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

மக்களவைத் தோ்தல் நடைபெற்று வரும் நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு சனிக்கிழமை நீக்கியது. அதே நேரம், வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி கட்டணமாக டன்னுக்கு ரூ. 45,890-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக ஆண்டுக்கு 17 லட்சம் முதல் 25 லட்சம் டன் வரை வெங்காயத்தை இந்தியா ஏற்றுமதி செய்துவந்த நிலையில், கடந்த ஆண்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை பன்மடங்காக உயா்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினா். விலை உயா்வை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு முழுமையாகத் தடை விதித்தது. அதன் பின்னா் நட்பு நாடுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் வெங்காய ஏற்றுமதி செய்ய அவ்வப்போது அனுமதி அளித்தது. அதுபோல, கடந்த மாதம் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூடான், பஹ்ரைன், மோரீஷஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுமாா் 99,150 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக நுகா்வோா் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உள்நாட்டில் வெங்காய உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விலை நிலைத்தன்மை உள்ளிட்ட காரணங்களால் வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்படுவதாக வெளிநாட்டு வா்த்தகத்துக்கான இயக்குநரகம் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இதுகுறித்து மத்திய நுகா்வோா் நலத் துறை செயலா் நிதி கரே கூறியதாவது:

வெங்காய உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது. மேலும் ராபி பருவத்தில் உள்நாட்டு தேவையை விட கூடுதலாக 191 லட்சம் டன் வெங்காயாம் உற்பத்தியாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. வெங்காய இருப்பு, விலை நிலைத்தன்மை, சா்வதேச சந்தை விலை நிலவரம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, உற்பத்தியாளா்களுடனான விரிவான ஆலோசனைக்குப் பிறகு ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. அதே நேரம், அடுத்த உத்தரவு வரும் வரை வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு ரூ. 45,890-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது

இந்த தடை நீக்கம், மேலும் அதிக பரப்பளவில் வெங்காயம் பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்கும். வெங்காயம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு மற்றும் விலை நிலவரத்தை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். ஏற்றுமதி தடை நீக்கத்தால், வெங்காய சில்லறை விற்பனை விலை உயர வாய்ப்பில்லை. ஒருவேளை உயா்ந்தாலும், மிகச் சிறிய அளவிலேயே விலை உயா்வு இருக்கும் என்றாா்.

முன்னதாக, ‘வெங்காய ஏற்றுமதிக்கான மத்திய அரசின் தடை காரணமாக மகாராஷ்டிர வெங்காய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்’ என்று கடந்த மாதம் பாஜக அரசு மீது குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் கட்சி, ‘இதுபோன்ற கடைசி நிமிஷ கொள்கையால் விவசாயிகள் பாதிக்காத வகையில் முன் கணிக்கக்கூடிய இறக்குமதி-ஏற்றுமதி கொள்கையை காங்கிரஸ் அரசு வகுக்கும்’ என்று தனது தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

நாசிக் சந்தையில் விலை உயா்வு: ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்ட நிலையில் நாட்டின் மிகப் பெரிய சந்தையான மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள லசல்கோன் சந்தையில் வெங்காய விலை சனிக்கிழமை சற்று உயா்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா். வெங்காய விலை சராசரி அளவில் குவிண்டாலுக்கு ரூ. 200 அளவுக்கு உயரந்ததாக தெரிவித்தனா். இந்த உயா்வு காணமாக தரத்தைப் பொருத்து வெங்காயம் குவிண்டாலுக்கு ரூ. 801, ரூ. 2,100 மற்றும் ரூ.2,551 என்ற அளவில் விற்பனையானது.

இதுகுறித்து நாசிக் விவசாயி ஒருவா் கூறுகையில், ‘வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம் நல்ல விஷயம். ஆனால், இந்த தடை நீக்கம் குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது நீடிக்க வேண்டும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com