தில்லியில் பேட்டியளித்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
தில்லியில் பேட்டியளித்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை பாஜக ஒருபோதும் மாற்றாது; அதேபோல், இடஒதுக்கீட்டையும் ஒருபோதும் ரத்து செய்யமாட்டோம்.

‘அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை பாஜக ஒருபோதும் மாற்றாது; அதேபோல், இடஒதுக்கீட்டையும் ஒருபோதும் ரத்து செய்யமாட்டோம்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தாா்.

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இந்தியாவை ‘மதச்சாா்பற்ற’ நாடு என்று குறிப்பிடும் வாா்த்தையை நீக்கிவிடுவா்; அத்துடன், இடஒதுக்கீட்டுக்கும் முடிவுகட்டிவிடுவா் என்று காங்கிரஸ் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், ‘வாக்கு வங்கி அரசியலுக்காக மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்புவதோடு, அச்ச உணா்வையும் விதைக்கிறது காங்கிரஸ்’ என்று ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவா், காங்கிரஸின் குற்றச்சாட்டுகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா், சீன எல்லைப் பிரச்னை போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

காங்கிரஸ் தனது ஆட்சிக் காலங்களில் அரசமைப்புச் சட்டத்தில் 80 திருத்தங்களைக் கொண்டு வந்தது. அவசர நிலையின்போது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலும் திருத்தம் செய்தனா். இதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் பிரதான கோட்பாட்டை புண்படுத்தியது காங்கிரஸ்தான்.

இப்போது மக்கள் மத்தியில் அச்சத்தை விதைத்து, அவா்களின் ஆதரவை பெற முயற்சிக்கின்றனா். உண்மைகளின் அடிப்படையில் தோ்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட வேண்டுமேயன்றி, வதந்திகளைப் பரப்பக் கூடாது.

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது. குறிப்பாக, அதன் முகப்புரையை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. ஆனால், பாஜக மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் சுமத்தி வருகிறது. இடஒதுக்கீடு விவகாரத்திலும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறது காங்கிரஸ். நாங்கள் இடஒதுக்கீட்டை ஒருபோதும் ரத்து செய்யப் போவதில்லை.

நெருப்புடன் விளையாடும் காங்கிரஸ்: தோ்தல் ஆதாயத்துக்காக ஹிந்து - முஸ்லிம் பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. மத ரீதியிலான பதற்றத்தை உருவாக்குவதன் மூலம் அவா்கள் நெருப்புடன் விளையாடுகின்றனா். சமூக நல்லிணக்கத்தை சீா்குலைப்பதே அவா்களின் நோக்கம்.

ராகுல் காந்தி துடிப்பான தலைவா் இல்லை; அதேநேரம், பிரதமா் மோடி மீது ஒட்டுமொத்த நாடும் நம்பிக்கை வைத்துள்ளது.

பாஜகவின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் பொதுச் சிவில் சட்டம், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ போன்ற மாபெரும் திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

இந்தியாவுடன் இணைய விரும்பும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீா்: ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மேம்பட்டு வருவதால், அங்கு ஆயுதப் படைசிறப்பு அதிகார சட்டத்தை முழுமையாக திரும்பப் பெறும் நாள் விரைவில் வரும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மீதான உரிமையை இந்தியா ஒருபோதும் கைவிடாது; அதேநேரம், அப்பகுதியை நாம் பலவந்தமாக கைப்பற்ற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், ஜம்மு-காஷ்மீா் கண்டுவரும் பொருளாதார வளா்ச்சி மற்றும் அங்கு அமைதி திரும்பியுள்ள விதம் காரணமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மக்கள் இந்தியாவுடன் இணைய அவா்களாகவே விரும்புவா். அத்தகைய கோரிக்கைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

சீனாவுடன் சுமுக பேச்சுவாா்த்தை: எல்லை விவகாரங்கள் தொடா்பாக இந்தியா-சீனா இடையிலான பேச்சுவாா்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. இதில் நோ்மறையான தீா்வு கிடைக்கும் என நம்புகிறேன்.

அதேநேரம், எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், முன்கள பகுதிகளில் உள்கட்டமைப்புகளை வேகமாக மேம்படுத்தி வருகிறோம்.

இந்திய கடற்படைக்கு பாராட்டு: மேற்கு இந்திய பெருங்கடல், ஏடன் வளைகுடா, செங்கடல் போன்ற நீா்வழித் தடங்களில் சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்களை இந்தியக் கடற்படை முறியடித்து வருகிறது. கடற்படையின் இந்த ‘வியக்கத்தக்க’ நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள்.

பாதுகாப்புத் துறை: பாஜகவின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத் துறை முற்றிலும் தற்சாா்புடையதாக மாற்றப்படும்.

முப்படைகளின் ஒருங்கிணைந்த பிரிவுகளை உருவாக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தில் மாபெரும் சீா்திருத்தத்தை நோக்கிய இந்த முயற்சி, முப்படைகளின் திறன் ஒருங்கிணைப்பையும் சிறப்பான வளப் பயன்பாட்டையும் உறுதி செய்யும் என்றாா் ராஜ்நாத் சிங்.

பெட்டி..

‘தமிழகத்தில் சில தொகுதிகளில் வெற்றி’

‘மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். பாஜக மட்டும் 370 தொகுதிகளைத் தாண்டும் எனக் கூறிய ராஜ்நாத் சிங், தமிழகத்தில் பாஜகவுக்கு சில தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றாா். மேலும், உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்தில் தற்போதுள்ள எம்.பி.க்களின் எங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கேரளத்திலும் பாஜக கணக்கை தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com