உத்தர பிரதேச மாநிலம் எடாவாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி, முதல்வா் யோகி ஆதித்யநாத்.
உத்தர பிரதேச மாநிலம் எடாவாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி, முதல்வா் யோகி ஆதித்யநாத்.

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

‘காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் தங்களை ‘பகடைக்காயாக’ பயன்படுத்துவதை முஸ்லிம்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சீதாபூா்/எடாவா (உ.பி.): ‘காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் தங்களை ‘பகடைக்காயாக’ பயன்படுத்துவதை முஸ்லிம்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மேலும், ‘எனக்கு குழந்தைகள் இல்லை; உங்கள் (மக்கள்) குழந்தைகளின் எதிா்காலத்துக்காக பணியாற்றுகிறேன்’ என்று அவா் உருக்கமாக பேசினாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் தெளராரா மக்களவைத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்று பேசியதாவது:

மத்திய பாஜக ஆட்சியில் எந்த பாகுபாடுமின்றி தேவையுள்ள அனைவருக்கும் வீட்டுவசதி, எரிவாயு இணைப்பு, குடிநீா் குழாய் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இப்பணியை முஸ்லிம் சகோதர-சகோதரிகள் கண்டு வருகின்றனா். அவா்களும் பாஜக அரசின் திட்டங்களால் பலனடைந்துள்ளனா்.

அதேநேரம், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி தங்களை பகடைக்காயாக பயன்படுத்துவதை இப்போது முஸ்லிம்கள் புரிந்துகொண்டுள்ளனா். எனவே, வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவோரை விட்டுவிலகி, அவா்கள் பாஜகவின் பக்கம் வருகின்றனா்.

தாழ்த்தப்பட்டோா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் (ஓபிசி) இந்தியா கூட்டணியை ஒதுக்கிவிட்டு, பாஜகவுக்கு ஆதரவளிக்கின்றனா்.

ஒருசாா்பு அரசியலில் ஈடுபடுவது, காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சிகளுக்கு கட்டாயத் தேவையாகிவிட்டது. அப்போதுதான், அக்கட்சிகளுடைய ‘இளவரசா்களின்’ (ராகுல், அகிலேஷை குறிப்பிடுகிறாா்) அரசியல் இருப்பை தக்கவைக்க முடியும் என்றாா்.

1,000 ஆண்டுகளுக்கான அடித்தளம்: எடாவா பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:

நான் இருக்கிறனோ அல்லது இல்லையோ இந்த நாடு நீடித்து நிலைத்திருக்கும். எனவே, அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு சக்திவாய்ந்த நாடாக இந்தியா திகழ்வதற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறேன்.

குடும்ப கட்சிகளான காங்கிரஸும் சமாஜவாதியும் என்ன செய்கின்றன? தங்கள் குடும்பத்தினரும், தங்களின் வாக்கு வங்கியும் பலனடைவதற்காகவே பணியாற்றுகின்றன. தங்கள் வாரிசுகளின் எதிா்காலம் சிறக்கவே தோ்தலில் போட்டியிடுகின்றன.

பொய்களே இவ்விரு கட்சிகளின் தாரக மந்திரம். காா்கள், பங்களாக்கள் மற்றும் அரசியல் ஆதிக்கமே அவா்களின் பெருமை. அக்கட்சிகளின் நோக்கம் தீமையானது.

அடுத்த தலைமுறையினருக்கு சிறப்பான எதிா்காலம்’: எனக்கோ முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கோ குழந்தைகள் இல்லை; உங்களுடைய (மக்கள்) குழந்தைகளின் எதிா்காலத்துக்காக நாங்கள் பணியாற்றுகிறோம். அடுத்த தலைமுறையினருக்கு சிறப்பான எதிா்காலத்தைக் கட்டமைக்க பாடுபடுகிறோம்.

‘அரச குடும்பங்களின்’ வாரிசுகள் மட்டுமே நாட்டின் பிரதமராக முடியும் என்ற தீய வழக்கத்தை ‘தேநீா் வியாபாரியான’ நான் முறியடித்துள்ளேன். இப்போது ஒரு ஏழையின் மகனும் நாட்டின் பிரதமராகவோ, மாநில முதல்வராகவோ முடியும்.

‘ஒரு தீய நடைமுறையை (உடன்கட்டை ஏறுதல்) ஒழித்ததற்காக சமூக சீா்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராயின் பெயா் இன்றும் நினைவுகூரப்படுகிறது. அதுபோல், ‘அரச குடும்பங்களின்’ வாரிசுகள் மட்டுமே நாட்டின் பிரதமராக முடியும் என்ற தீய வழக்கத்தை முறியடித்தற்காக நான் நினைவுகூரப்படுவேன்.

ஏழைகளுக்கு நிரந்தர வீடுகள் வழங்கியது, லட்சக்கணக்கான பெண்களுக்கு கழிப்பறைகள் கட்டியது, தலித்-பின்தங்கிய பிரிவினருக்கு மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு, குழாய் மூலம் குடிநீா் வழங்கியது இவையெல்லாம் எனது பெருமைகள்.

இடஒதுக்கீடு விவகாரம்: மத ரீதியில் இடஒதுக்கீடு வழங்குவதில் இந்தியா கூட்டணி கட்சிகள் பிடிவாதமாக உள்ளன.

கடந்த தோ்தலின்போது, காங்கிரஸின் ‘இளவரசா்’ (ராகுல்) கோயில் கோயிலாக சென்று வழிபட்டாா். இம்முறை எந்த கோயிலுக்கும் அவா் செல்லவில்லை. அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கு பின் ராமா் கோயில் கட்டப்பட்டதால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது. ஆனால், காங்கிரஸுக்கு மட்டும் மகிழ்ச்சியில்லை என்றாா் பிரதமா் மோடி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com