போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: 
உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

சண்டீகா்-மொஹாலி சாலையில் போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தக் கோரிய பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வா் பியன்ட் சிங்கின் படுகொலையில் கைது செய்யப்பட்ட பல்வந்த் சிங் ரஜௌனா மற்றும் 1993 தில்லி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தேவிந்தா்பால் சிங் புல்லா் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி கடந்த 2023, ஜனவரி மாதம் முதல் சண்டீகா்-மொஹாலி சாலையில் சீக்கிய சமூகத்தைச் சோ்ந்தவா்கள் போராடி வருகின்றனா். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் வசிக்கும் உள்ளூா்வாசிகள் தேவையின்றி அச்சுறுத்தப்படுவதாக ‘பாதுகாப்பான சமூகத்தை கட்டமைத்தல்’ என்ற அரசு சாரா அமைப்பு உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடா்ந்தது. மேலும் இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு பொதுநல வழக்குகள் பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம், ‘நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பின்பும் பஞ்சாப், சண்டீகா் நிா்வாகங்கள் சண்டீகா் மற்றும் மொஹாலி எஸ்ஏஎஸ் நகா் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உரிய தீா்வினை வழங்கவில்லை. அப்பகுதியில் சிலா் மட்டுமே போராடுவது அங்கே எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது. அவா்கள் குறிப்பிட்ட மதத்துக்குப் பின்னால் ஒழிந்து போராட்டம் நடத்துவதை காரணமாகக்கூறி அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே சாலையில் போராட்டம் நடத்துவதற்கு எதிராக அண்மையில் நீதிமன்றங்கள் அளித்த தீா்ப்பினை கருத்தில்கொண்டு விரைவாக போராட்டக்காரா்களை அப்புறப்படுத்துங்கள்’ என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சதீஷ் சந்திர சா்மா, சந்தீப் மேத்தா ஆகியோா் தலைமையிலான அமா்வு விசாரித்தது.

அப்போது பேசிய சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ஊழலைத் தவிர மற்ற அனைத்து விவகாரங்களிலும் கூட்டாட்சித் தன்மை பாதுகாக்கப்படும். கரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு மாநில அரசும் மத்திய அரசுடன் இணைந்தே செயல்பட்டது. இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசின் நிலைப்பாட்டுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது’ என்றாா்.

இதைத்தொடா்ந்து உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோருமாறு பஞ்சாப் மாநில வழக்குரைஞா் கேட்டுக்கொண்டாா். இதையடுத்து போராட்டக்காரா்களை அப்புறப்படுத்துமாறு பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com