காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

இந்திய விமானப்படையினரின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ஜம்மு-காஷ்மீரில் இந்திய விமானப்படையினரின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சுரான்கோட்டில் உள்ல ஷாசிதார் பகுதிக்கு அருகே சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்த இந்திய விமானப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஒருவர் பின்னர் வீரமரணமடைந்தார்.

சுரான்கோட் பகுதியில் தாக்குதல் நடைபெற்ற இடத்தை ஜம்மு கூடுதல் டிஜிபி ஆனந்த் ஜெயின், ராணுவம் மற்றும் உளவுத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர். இத்தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினரும் போலீஸôரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஷாசிதார், குர்சாய், சனாய், ஷீந்தாரா டாப் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கூட்டு நடவடிக்கை தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப் படையினர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அதன் பிறகு ஒரு காட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிக அளவு உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாதிகள் ஏகே ரக துப்பாக்கிகளைத் தவிர அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்4 கார்பைன் மற்றும் ஸ்டீல் தோட்டாக்களையும் பயன்படுத்தியதாக அதிகாரிகள் கூறினர்.

இந்தத் தாக்குதலில் வீரமரணமடைந்தவரின் பெயர் விக்கி பஹாடே என்று விமானப்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விமானப்படை, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் "தேசத்துக்கு சேவையாற்றியபோது உயிர்த் தியாகம் செய்த வீரர் விக்கி பஹாடேவின் உடலுக்கு விமானப் படை தளபதி வி.ஆர்.சௌதரி உள்ளிட்ட படையினர் மரியாதை செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம். அவரது குடும்பத்தாருக்கு இந்த இக்கட்டான தருணத்தில் துணைநிற்கிறோம்' என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவத்தின் பாரா கமாண்டோ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானப்படை வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர். இந்த ஆண்டில் ஜம்மு பிராந்தியத்தில் நடைபெற்றுள்ள பெரிய தாக்குதல் இதுவாகும்.

மே 25ஆம் தேதி ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ள பூஞ்ச் மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அனந்த்நாக்-ரஜௌரி மக்களவைத் தொகுதியில் ஒரு பகுதியாக பூஞ்ச் இடம்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com