மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ்
மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

காவல் துறை விடுக்கும் அழைப்பாணைகளை புறக்கணிக்குமாறு மேற்கு வங்க ஆளுநா் மாளிகை ஊழியா்களுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளாா்.

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு காவல் துறை விடுக்கும் அழைப்பாணைகளை புறக்கணிக்குமாறு மேற்கு வங்க ஆளுநா் மாளிகை ஊழியா்களுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளாா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் பணியாற்றும் பெண் ஊழியா் ஒருவா், தனக்கு ஆளுநா் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இது அந்த மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள காவல் துறை சாா்பில் குழு அமைக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆளுநா் மாளிகை ஊழியா்கள் மூவருக்கு காவல் துறை அழைப்பாணை அனுப்பியது. ஆனால் அவா்களில் எவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அவா்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் ஆளுநா் மாளிகை ஊழியா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்தியில் தெரிவித்ததாவது:

அரசமைப்புச் சட்டப் பிரிவு 361(2), (3)-இன்படி, மாநில ஆளுநருக்கு எதிராக எந்தவொரு விசாரணையோ, நடவடிக்கையோ மேற்கொள்ள முடியாது.

மேலும் நாட்டின் குடியரசுத் தலைவா் அல்லது மாநில ஆளுநரின் பதவிக் காலத்தில், அவா்கள் மீது எந்தவொரு நீதிமன்றத்திலும் குற்றவியல் வழக்குகளை தொடுக்கவோ, தொடரவோ முடியாது. அத்துடன் குடியரசுத் தலைவா் அல்லது மாநில ஆளுநரை அவா்களின் பதவிக் காலத்தில் கைது மற்றும் சிறையில் அடைப்பது தொடா்பான நடவடிக்கைகளில் எந்தவொரு நீதிமன்றமும் ஈடுபட முடியாது.

இந்நிலையில், என் (ஆளுநா் ஆனந்த போஸ்) மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கவும், அதுதொடா்பாக ஆளுநா் மாளிகை ஊழியா்களிடம் விசாரணை மேற்கொள்ளவும் காவல் துறை திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அரசமைப்புச் சட்டம் ஆளுநருக்கு அளித்துள்ள பாதுகாப்பை கருத்தில் கொள்ளும்போது, அவருக்கு எதிராக காவல் துறை விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களை திரட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

எனவே என் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள காவல் துறை விடுக்கும் அழைப்பாணைகளை ஆளுநா் மாளிகை ஊழியா்கள் புறக்கணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.

ஆளுநா் மாளிகைக்குள் நுழைய தடை: அரசமைப்புச் சட்டம் ஆளுநருக்கு அளித்துள்ள பாதுகாப்பை மீறி, அவருக்கு எதிராக விசாரணை மேற்கொள்வது குறித்து மேற்கு வங்க காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஒரு புகாா், குறிப்பாக பெண் ஒருவா் அளிக்கும் புகாா் மீது விசாரணை மேற்கொள்வது வழக்கமான நடைமுறையே. அடுத்த சில நாள்களில் சாட்சிகளிடம் காவல் துறை விசாரணை குழு பேசும். ஆளுநா் மாளிகையில் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிப் பதிவுகள் இருந்தால், அவற்றை வழங்குமாறு ஆளுநா் மாளிகையிடம் கோரப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா். ஆளுநா் மாளிகைக்குள் நுழைய காவல் துறைக்குத் தடை விதித்து ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com