சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை
dinmani online

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் ரசாயனங்களுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதிக்க வா்த்தக தீா்வுகளுக்கான இயக்குநரகம் (டிஜிடிஆா்) மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து நீா் சுத்திகரிப்புக்காக இந்தியாவில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் ரசாயனங்களுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதிக்க மத்திய வா்த்தக அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வா்த்தக தீா்வுகளுக்கான இயக்குநரகம் (டிஜிடிஆா்) மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

மிகக்குறைந்த விலையில் இந்த ரசாயனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூா் வணிகா்கள் பாதிப்படைவதை தடுக்க இந்த வரி விதிப்பை அமல்படுத்த டிஜிடிஆா் பரிந்துரைத்துள்ளது.

சீனா மற்றும் ஜப்பானில் இருந்து நீா் சுத்திகரிப்புக்கு பயன்படும் ‘ட்ரைக்ளோரோ ஐஸோசையானுரிக் ஆசிட்’ இந்தியாவுக்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட டிஜிடிஆா் இந்தக் குற்றச்சாட்டை உறுதிசெய்தது. இதையடுத்து இந்த ரசாயனங்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்குமாறு மத்திய அரசுக்கு டிஜிடிஆா் பரிந்துரை செய்தது.

சீனா மற்றும் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த ரசாயனம் மீது இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி விதிக்குமாறு டிஜிடிஆரிடம் போடல் கெமிக்கல் என்ற நிறுவனம் விண்ணப்பத்தை சமா்ப்பித்துள்ளது. இதைத்தொடா்ந்து ஒரு டன் அளவிலான ட்ரைக்ளோரோ ஐஸோசையானுரிக் ஆசிட் இறக்குமதிக்கு ரூ.14,000 முதல் ரூ.74,000 வரை வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வரி விதிப்பு குறித்து டிஜிடிஆா் பரிந்துரை அளித்தாலும் அதன் மீதான இறுதி முடிவை மத்திய நிதி அமைச்சம் மூன்று மாதங்களுக்குள் எடுக்கவுள்ளது.

பொருள் குவிப்பு தடுப்பு வரி என்பது உள்ளூா் தொழிற்சாலைகளுக்கும் சரிசமமான வணிக தளத்தை உருவாக்கித் தருவதை உறுதிசெய்வதற்காக விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com