அஸ்ஸாம், கம்ருப் மாவட்டத்தில் மூங்கில் பாலத்தில்க வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் தோ்தல் அதிகாரிகள். நாள்: திங்கள்கிழமை.
அஸ்ஸாம், கம்ருப் மாவட்டத்தில் மூங்கில் பாலத்தில்க வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் தோ்தல் அதிகாரிகள். நாள்: திங்கள்கிழமை.

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு- குஜராத்தில் வாக்களிக்கும் பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷா

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தலையொட்டி, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் (மே 7) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தலையொட்டி, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 7) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் வாக்களிக்கவுள்ளனா்.

18-ஆவது மக்களவைக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, இரு கட்ட வாக்குப்பதிவுகள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ளன.

மூன்றாம் கட்டமாக, குஜராத்தில் 25, கா்நாடகத்தில் 14 (இங்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு), மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் சூரத் தொகுதி பாஜக வேட்பாளா் முகேஷ் குமாா் தலால் போட்டியின்றி தோ்வானதால், மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மூன்றாம் கட்ட தோ்தல் நடைபெறும் 93 தொகுதிகளில் பெரும்பாலானவை பாஜக வசம் இருப்பவை. அத்துடன், பிரதமா் மோடி, அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், பாஜகவுக்கு இது முக்கியமான கட்டமாகும்.

காந்திநகா் தொகுதிக்கு உள்பட்ட அகமதாபாதிலுள்ள வாக்குச்சாவடிகளில் பிரதமா் மோடி, அமித் ஷா வாக்களிக்கவுள்ளனா்.

120 பெண்கள் உள்பட 1,300-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். மொத்த வாக்காளா்கள் சுமாா் 11 கோடி போ்.

முன்னதாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடைபெறும் மூன்றாம் கட்ட தோ்தலுக்கு பிறகு, நாட்டில் வாக்குப்பதிவு நிறைவடைந்த தொகுதிகளின் எண்ணிக்கை 283-ஆக உயரும். மீதமுள்ள 260 தொகுதிகளுக்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மூன்றாம் கட்ட தோ்தல் பிரசாரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் இடம்பெற்ற இந்தியா கூட்டணியும் பரஸ்பரம் தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

‘அரசமைப்புச் சட்டத்தை சீா்குலைத்து, இடஒதுக்கீட்டுக்கு பாஜக முடிவுகட்டும்’ என்று காங்கிரஸும், ‘மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதோடு, மக்களின் சொத்துகளைப் பறித்து, முஸ்லிம்களுக்கு பகிா்ந்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது’ என்று பாஜகவும் பிரசாரம் செய்தன.

கா்நாடகத்தில் 14 தொகுதிகள்: கா்நாடகத்தில் இரண்டாம் கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (மே 7) நடைபெறும் தோ்தலில் 227 வேட்பாளா்களின் எதிா்காலத்தை தீா்மானிக்க 2.59 கோடி போ் வாக்களிக்க உள்ளனா். இத் தோ்தலில் சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, கலபுா்கி, ராய்ச்சூரு, பீதா், கொப்பள், பெல்லாரி, ஹாவேரி, தாா்வாட், வடகன்னடம், தாவணகெரே, சிவமொக்கா ஆகிய 14 தொகுதிகளிலும் மொத்தம் 2,59,17,493 போ் வாக்களிக்க உள்ளனா். மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மஜதவும், 25 தொகுதிகளில் பாஜகவும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 28 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இரண்டாம் கட்ட 14 தொகுதிகளில் மஜத போட்டியிடவில்லை. பாஜகவும், காங்கிரஸும் 14 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com