தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரணை நடத்த வேண்டும் என தில்லி துணைநிலை ஆளுநர் சக்ஸேனா பரிந்துரைத்துள்ளார்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தற்போது அவா் நீதிமன்றக் காவலில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இதனிடையே, கைது நடவடிக்கைக்கு எதிராக கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

'சீக்கியர்களுக்கான நீதி' என்ற தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து, அரவிந்த் கேஜரிவால் நிதி பெற்றதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட 'சீக்கியர்களுக்கான நீதி' அமைப்பிடம் இருந்து, அரசியல் ஆதாயத்திற்காக ஆம் ஆத்மி கட்சி 16 மில்லியன் டாலர் நிதி பெற்றுள்ளதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. உலக இந்து கூட்டமைப்பை சேர்ந்த அஷூ மோங்கியா என்பவர் மேற்கண்ட புகாரளித்துள்ளார்.

மேற்கண்ட புகாரைச் சுட்டிக்காட்டி அரவிந்த் கேஜரிவால் மீது பயங்கரவாத குற்ற வழக்குகளை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரணை நடத்த மத்திய உள்துறைச் செயலாளருக்கு தில்லி துணைநிலை ஆளுநர் சக்ஸேனா கடிதம் எழுதியுள்ளார். 1993ஆம் ஆண்டு தில்லி வெடிகுண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, சிறையிலடைக்கபட்டுள்ள காலிஸ்தான் ஆதரவாளரான தேவேந்திர பால் புலரை விடுவிப்பதற்காக கேஜரிவால் நிதி பெற்றதாக புகாரில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தில்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கும் இன்னும் 3 வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கேஜரிவால் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாஜக அரசு இப்படி நடந்துகொள்வதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com