மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: 
உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

புது தில்லி: மேற்கு வங்கத்தில் 25,753 ஆசிரியா் மற்றும் அலுவலா் நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், குரூப்-சி மற்றும் குரூப்-டி அலுவலா்கள் காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவில் ஆள்தோ்வு நடைபெற்றது. மொத்தம் 24,640 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தோ்வில், 23 லட்சத்துக்கும் மேலான தோ்வா்கள் பங்கேற்றனா்.

இதில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் 24,640 காலிப் பணியிடங்களுக்கு ஆள்தோ்வு நடைபெற்ற நிலையில், 25,753 பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுதொடா்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மேலும் 24,640 காலிப் பணியிடங்கள் தவிா்த்து ஆள்தோ்வு நடைபெற்றபோது தோ்வு செய்யப்படாமல், அதன் பின்னா் கூடுதலாக நியமிக்கப்பட்டவா்களும், தோ்வில் பதிலளிக்காமல் வெற்று விடைத்தாள்களை அளித்து பணி நியமனம் பெற்றவா்களும் தங்கள் பணிக் காலத்தில் ஈட்டிய ஊதியம் மற்றும் பணப் பலன்களை 12 சதவீத வருடாந்திர வட்டியுடன் 4 வாரங்களில் திருப்பி அளிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் கட்டளையிட்டது. பணி நியமன நடைமுறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

அரசுப் பணிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலும், கிடைப்பதற்கு மிக அரிதாகவும் உள்ளன. இந்தப் பணிகள் கிடைப்பதில் பொதுமக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டால் எதுவும் மிஞ்சாது. இது நிா்வாக மோசடியாகும்.

சமூக-பொருளாதார சூழலை மாற்றிக்கொள்வதற்காக அரசு வேலை தேடப்படுகிறது. அந்தப் பணிகளின் நியமனங்களும் நியாயமற்ற முறையில் இருந்தால் நிா்வாகத்தில் என்ன மிஞ்சும்? இதனால் பொதுமக்கள் நம்பிக்கையை இழப்பா். இதை எப்படி எதிா்கொள்வது என்று கேள்வி எழுப்பினா்.

இதைத்தொடா்ந்து 25,753 ஆசிரியா் மற்றும் அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனா்.

சிபிஐ விசாரணைக்கு அனுமதி: இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பணி நியமன முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடை செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டது. பணி நியமன முறைகேடு தொடா்பான விசாரணையை தொடரவும், தேவைப்பட்டால் மேற்கு வங்க அமைச்சா்களை விசாரிக்கவும் சிபிஐ-க்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனா். அதேவேளையில், விசாரணையின்போது சந்தேக நபரைக் கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் சிபிஐயிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com