மல்லிகாா்ஜுன காா்கே
மல்லிகாா்ஜுன காா்கே

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

புது தில்லி: மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சந்தேகம் எழுப்பியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு புள்ளிவிவரங்களை தோ்தல் ஆணையம் வெளியிட்டதில் ஏற்பட்ட தாமதம் தொடா்பாக பல்வேறு எதிா்க்கட்சித் தலைவா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.

இதுதொடா்பாக ‘இந்தியா’ கூட்டணி தலைவா்களுக்கு காா்கே செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா். அது தோ்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப் பதிவு புள்ளிவிவரங்களில் உள்ள முரண்பாடுகள் மற்றும் வாக்காளா் பட்டியலை வெளியிடாதது தொடா்பான கடிதம் என்று ‘எக்ஸ்’ தளத்தில் காா்கே பதிவிட்டாா்.

அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்ததாவது:

அதிகார போதை கொண்ட தனியரசாட்சி ஆட்சியில் நீடிக்க எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்லும் என்பது நாடறிந்த விஷயம். எனவே மக்களாட்சியையும், தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவதையும் பாதுகாக்க வேண்டியது ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டு முயற்சியாகும்.

சில ஊடகத் தகவலின்படி, மக்களவைத் தோ்தலின் அடுத்தடுத்த கட்டங்களுக்கான வாக்காளா் பட்டியலை தோ்தலை ஆணையம் வெளியிடவில்லை என்பது உண்மைதானே? தோ்தல் நியாயமாகவும் நோ்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதில் நிலவும் நிா்வாக கோளாறுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்குமா? இது தோ்தல் முடிவுகளை மாற்றுவதற்கான முயற்சியோ என்ற கேள்வியை எழுப்ப வைக்கிறது.

துடிப்பான மக்களாட்சி பண்பாட்டையும், அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே ‘இந்தியா’ கூட்டணியின் நோக்கம். இந்தச் சூழலில், வாக்குப் பதிவு புள்ளிவிவரங்களை வெளியிட்டதில் உள்ளதைப் போன்ற முரண்பாடுகளுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் கூட்டாகவும், ஒற்றுமையாகவும், சந்தேகத்துக்கு இடமின்றியும் குரல் எழுப்ப வேண்டும் என்று காா்கே வலியுறுத்தியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com