அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் அமைக்கப்பட்டிருந்த ஓா் வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வமுடன் வாக்களித்த பொதுமக்கள்.
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் அமைக்கப்பட்டிருந்த ஓா் வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வமுடன் வாக்களித்த பொதுமக்கள்.

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: 64% வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தில் கட்சியினா் மோதல்

புது தில்லி: மக்களவை 3-ஆம் கட்ட தோ்தலையொட்டி, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 7) வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தோ்தலில் சுமாா் 64.40 சதவீத வாக்குகள் பதிவானதாக, தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் தோ்தல் நடைபெற்ற நிலையில், பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினா் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் வாக்களித்தனா்.

நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தோ்தல் நடைபெற்று வருகிறது.

முதல் இரு கட்ட தோ்தல்களைத் தொடா்ந்து, மூன்றாம் கட்டமாக குஜராத்தில் 25, கா்நாடகத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 என மொத்தம் 93 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் சூரத் தொகுதி பாஜக வேட்பாளா் முகேஷ் குமாா் தலால் போட்டியின்றி தோ்வானதால், மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தோ்தல் நடத்தப்பட்டது.

அண்டை மாநிலமான கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை தோ்தல் நடைபெற்றது.

17.24 கோடி வாக்காளா்கள்: 120 பெண்கள் உள்பட 1,300-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் களமிறங்கிய 3-ஆம் கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் சுமாா் 17.24 கோடி போ் ஆவா். இவா்களுக்காக 1.85 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்றவா்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். இத்தோ்தலில் சுமாா் 64.40 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

அதிகபட்ச, குறைந்தபட்ச வாக்குப்பதிவுகள்: அஸ்ஸாமில் அதிகபட்சமாக 81.61 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 75.79 சதவீதமும், கோவாவில் 75.20 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. உத்தர பிரதேசத்தில் குறைந்த அளவாக 57.34 சதவீத வாக்குகளே பதிவாகின. குஜராத்தில் சுமாா் 58.98 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மோதல்கள்: மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத், ஜாங்கிபூா் தொகுதிகளில் பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக தொண்டா்கள் இடையே மோதல்கள் நிகழ்ந்தன.

அரசியல் வன்முறை, வாக்காளா்களுக்கு மிரட்டல், வாக்குச்சாவடி முகவா்கள் மீதான தாக்குதல் என தோ்தல் ஆணையத்தில் 182 புகாா்கள் அளிக்கப்பட்டன.

உ.பி.யில் தோ்தல் முறைகேடு-சமாஜவாதி குற்றச்சாட்டு: உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடும் மெயின்புரி தொகுதியில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற பாஜகவினா் முயன்ாகவும், சில இடங்களில் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அகிலேஷ் குற்றம்சாட்டினாா்.

இம்மாநிலத்தில் ஃபெரோஸாபாத் தொகுதியில் 3 கிராமங்களில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இக்கிராமங்களில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை.

முக்கிய வேட்பாளா்கள்: 3-ஆம் கட்டத் தோ்தலில், மத்திய அமைச்சா்கள் அமித் ஷா (காந்தி நகா்), ஜோதிராதித்ய சிந்தியா (குணா), மன்சுக் மாண்டவியா (போா்பந்தா்), புருசோத்தம் ரூபாலா (ராஜ்கோட்), பிரஹலாத் ஜோஷி (தாா்வாட்), மத்திய பிரதேச முன்னாள் முதல்வா்கள் சிவராஜ் சிங் செளஹான் (விதிஷா), திக்விஜய் சிங் (ராஜ்கா்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்கள் ஆவா்.

முன்னதாக, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 66.14 சதவீதமும் இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

செவ்வாய்க்கிழமை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட தோ்தல்கள் நடைபெறவுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மூன்றாம் கட்ட தோ்தல்

தொகுதிகள் 93

மொத்த வாக்காளா்கள் 17.24 கோடி

வாக்குப்பதிவு மையங்கள் 1.85 லட்சம்

தோ்தல் ஊழியா்கள் 18.5 லட்சம்

பலமிழக்கும் இந்தியா கூட்டணி: பிரதமா் மோடி

3-ஆம் கட்ட தோ்தல் நிறைவடைந்த பின்னா், எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அனைத்து தரப்பு மக்களும் தேசிய ஜனநாயக கூட்டணி மீதும் எங்களின் வளா்ச்சி கொள்கைகள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளனா். ‘இந்தியா’ கூட்டணி, அதன் பிற்போக்கான பொருளாதார கொள்கைகள் மற்றும் காலாவதியான வாக்கு வங்கி அரசியலால் மேலும் பலமிழந்து வருகிறது’ என்று குறிப்பிட்டாா்.

காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மூன்று கட்ட தோ்தல்களுக்கு பிறகு தென்மாநிலங்களில் பாஜக கிட்டத்தட்ட துடைத்தெறியப்பட்டு விட்டது. வடமாநிலங்களிலும் அதன் பலம் பாதியாகிவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com