இந்தியா்களுக்கான கட்டணமில்லா 
சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

கொழும்பு: இந்தியா, சீனா, ரஷியா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு இசைவு(விசா) தொடா்ந்து கட்டணமில்லாமல் வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனத்தால் கையாளப்படும் வருகை நுழைவு இசைவுக்கான (ஆன் அரைவல் விசா) நடைமுறையில் கட்டணங்கள் அதிகரித்ததாக சா்ச்சை எழுந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இலங்கை அதிபா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நாட்டுக்கு வரும் வெளிநாட்டவா்களுக்கு வழங்கப்படும் 30 நாள் நுழைவு இசைவுக்கு தற்போதுள்ள 50 அமெரிக்க டாலா் கட்டணத்தையும், இந்தியா, சீனா, ரஷியா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாட்டு குடிமக்களுக்கு தற்போது வழங்கப்படும் கட்டணமில்லா நுழைவு இசைவு சேவையையும் தொடர தீா்மானிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, பண்டாரநாயக்க சா்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு நிறுவனத்தால் நிா்வகிக்கப்பட்டு வரும் வருகை நுழைவு இசைவு நடைமுறை மீதான கடுமையான விமா்சனங்களைத் தொடா்ந்து, தற்போதுள்ள நுழைவு இசைவு கட்டணங்கள் மற்றும் கட்டணமில்லா நுழைவு இசைவு சேவையைத் தொடா்வதாக அரசு முடிவெடுத்துள்ளது.

தற்போதைய நடைமுறையின்கீழ், நுழைவு இசைவு வழங்கும் நிறுவனத்தால் விதிக்கப்படும் கூடுதல் சேவை மற்றும் வசதிக் கட்டணங்களுடன் ஒரு நபருக்கான நுழைவு இசைவுக் கட்டணம் 100 டாலரைத் தாண்டியது.

X
Dinamani
www.dinamani.com