கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவருடைய மனைவி ராதாபாய்.
கர்நாடக மாநிலம் கலபுர்கியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவருடைய மனைவி ராதாபாய்.

பெங்களூர்: மக்களவைத் தேர்தலையொட்டி, கர்நாடகத்தின் 14 தொகுதிகளிலும் விறுவிறுப்பான, அமைதியான வாக்குப் பதிவு நடைபெற்றது. முக்கிய தலைவர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். 14 தொகுதிகளிலும் சராசரியாக 70.41 சதவீத வாக்குகள் பதிவாகின.

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுர்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ்நகர், ஊரக பெங்களூரு, வடக்கு பெங்களூரு, மத்திய பெங்களூரு, தெற்கு பெங்களூரு, சிக்பளாப்பூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளுக்கு ஏப். 26ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது.

இரண்டாம் கட்டமாக, சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, கலபுர்கி, ராய்ச்சூரு, பீதர், கொப்பள், பெல்லாரி, ஹாவேரி, தார்வாட், வடகன்னடம், தாவணகெரே, சிவமொக்கா ஆகிய 14 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த வாக்குப் பதிவில் சராசரியாக 67 சதவீத வாக்குகள் பதிவாகின. கடும் வெயிலைக் கருத்தில் கொண்டு, வாக்குப் பதிவுக்கு கூடுதலாக ஒருமணி நேரம் அளிக்கப்பட்டிருந்தது. சில சம்பவங்களைத் தவிர, மாநிலத்தில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

14 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக - மஜத கூட்டணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 227 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வாக்குப் பதிவு: காலை 7 மணி முதலே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. பெண்கள், முதியோர், ஊனமுற்றோர் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 14 தொகுதிகளில் உள்ள 2,59,17,493 வாக்காளர்களில் 70.41 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 28,257 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலையில் உற்சாகமாக இருந்த வாக்குப் பதிவு, பிற்பகலில் வெயில் அதிகமானதும் மந்தமானது. மாலையில் மீண்டும் வாக்குப் பதிவு சூடுபிடித்தது. காலை 9 மணிக்கு 9.45 சதவீதமாக இருந்த வாக்குப் பதிவு, 11 மணிக்கு 25 சதவீதம், நண்பகல் 1 மணிக்கு 42 சதவீதம், மாலை 3 மணிக்கு 54.20 சதவீதம், மாலை 5 மணிக்கு 66.05 சதவீதமாக இருந்தது. மாலை 6 மணிக்கு 70.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

2019ஆம் ஆண்டில் இந்த 14 தொகுதிகளிலும் 68.72 சதவீத வாக்குகள் பதிவாகின.சில சம்பவங்களைத் தவிர, தேர்தல் அமைதியானமுறையில் நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முக்கிய தலைவர்கள் வாக்களிப்பு: கலபுர்கியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிவமொக்காவில் குடும்பத்தினருடன் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தார்வாடில் குடும்பத்துடன் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, பீதரில் மத்திய இணையமைச்சர் பகவந்த் கூபா, தாவணகெரேயில் எம்.பி. சித்தேஸ்வர், கலபுர்கியில் மாநில அமைச்சர் பிரியாங்க் கார்கே, விஜயபுராவில் முன்னாள் மத்திய அமைச்சர் பசனகெüடா பாட்டீல் யத்னல், ஹாவேரியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, பெலகாவியில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், சிவமொக்காவில் முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, பெல்லாரியில் முன்னாள் அமைச்சர் பி.ஸ்ரீராமுலு, பெலகாவியில் அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

உணவு இடைவேளை: தார்வாட் தொகுதிக்கு உள்பட்ட வேளாண் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 180ஆவது வாக்குச்சாவடியில் பிற்பகல் 1 மணி முதல் அரை மணி நேரம் உணவு இடைவேளை விடப்பட்டிருந்தது. வாக்குச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் உணவு உட்கொள்வதற்காக வாக்குச் சாவடியின் கதவை அடைத்து, வாக்குப் பதிவை நிறுத்துவிட்டு, உள்ளே உட்கார்ந்து உணவு உண்டனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருந்தனர். வழக்கத்தில் இல்லாத உணவு இடைவேளை நடைமுறை குறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான திவ்யா பிரபுவுக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மாரடைப்பால் மரணம்: பாகல்கோட் மாவட்டம், முதோல் நகரத்தில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தப்பா சித்தப்பா (48), பீதர் மாவட்டத்தின் குடும்பல் கிராமத்தைச் சேர்ந்த உதவி வேளாண் அதிகாரி ஆனந்த் தேலங்க் (32) ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்ததாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இடைத் தேர்தல்: யாதகிரி மாவட்டத்தின் ஷொராபுரா சட்டப்பேரவைத் தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை இடைத் தேர்தல் தேர்தல் நடந்தது. இத் தேர்தலில் சராசரியாக 66.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com