'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

கும்லா (ஜார்க்கண்ட்): மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் "அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம், கும்லாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

அக்னிபத் திட்டத்தை மோடிதான் கொண்டுவந்தார்; ராணுவம் கொண்டுவரவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிபத் திட்டத்தை நீக்கிவிடும். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் ராணுவ வீரர்களிடையே பாரபட்சம் காட்ட நாங்கள் விரும்பவில்லை. தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்யும் எந்த ஒருவருக்கும் தியாகி அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

5 வகையான வரி விகிதங்களைக் கொண்ட தவறான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. நாங்கள் இதை மாற்றி குறைந்தபட்ச வரி விகிதம் கொண்ட ஜிஎஸ்டியைக் கொண்டுவருவோம். ஏழைகள் மீதான வரியை நாங்கள் குறைப்போம்.

மத்திய பாஜக அரசு பழங்குடியினருக்கு துரோகம் இழைத்து வருகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழாவுக்கும், அயோத்தியில் சிலை பிரதிஷ்டை விழாவுக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காததன் மூலம் அவரை பிரதமர் மோடி அவமதித்து விட்டார்.

பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே போன்றவற்றை தனியார் தொழிலதிபர்களுக்குத் தாரை வார்க்க பாஜக உத்தேசித்துள்ளது என்றார்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், சைபாசா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில் "பழங்குடி இனத்தவரின் நீர், நிலம், வனங்கள் ஆகியவற்றை 14-15 தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க பிரதமர் விரும்புகிறார். அதானி, அம்பானி ஆகியோருக்காக அவர் பாடுபடுகிறார். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் 22 பெரும் கோடீஸ்வரர்களை மோடி உருவாக்கியுள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதியாக்குவோம். மேலும் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்தை வழங்குவோம். இந்த மக்களவைத் தேர்தலானது அரசியல் சாசனத்தையும், பழங்குடி இனத்தவர், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் உரிமைகளையும் காப்பதற்கானது. அரசியல் சாசனத்தைக் காப்பதற்காக உயிர்த்தியாகம் செய்யவும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள்' என்றார்.

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டம் சாய்பாசாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை வரவேற்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் கல்பனா சோரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com