
மாத்ருபூமி செய்தி சேனலின் கேமராமேன், வனத்தில் யானைகள் நடமாட்டத்தை விடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.
பிரபலமான மாத்ருபூமி செய்தி சேனலில் கேமராமேனாகப் பணிபுரிந்தவர் ஏ.வி. முகேஷ் (34). இவரும், நிருபரும் சேர்ந்து பாலக்காடு மாவட்டத்தில் வனத்தில் யானைகள் நடமாட்டத்தை விடியோ எடுக்க வாகனத்தில் சென்றிருந்தனர்.
அப்போது மலம்புழைக்கும் கஞ்சிக்கோட்டுக்கும் இடையே செல்லும் ஆற்றைக் கடந்து யானைகள் சென்று கொண்டிருந்தன. அதை விடியோ எடுக்க கேமராமேன் முகேஷ் முயன்றபோது யானைக் கூட்டம் திடீரென அங்கு வந்தது. யானைகளைக் கண்டதும் நிருபரும், வாகன ஓட்டுநரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். முகேஷை யானை பலமாகத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த முகேஷை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மலப்புரம் மாவட்டம், பரப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த முகேஷ், இந்த செய்தி சேனலில் பாலக்காடு பிரிவு தலைமை செய்தி சேகரிப்பாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் இந்த சேனலில் பல ஆண்டுகள் தில்லி பிரிவிலும் செய்தி சேகரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். மாத்ருபூமி இணையத்தில் "அதிஜீவனம்' என்ற பெயரில் அவர் 100 கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். அதில் விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்த விளிம்புநிலை மக்களுக்கு அவர் தனது ஊதியத்தில் இருந்து நிதியுதவி செய்துள்ளார். இறந்த முகேஷுக்கு மனைவி உள்ளார்.
இதுகுறித்து அவரது சகப் பணியாளர் ஒருவர் கூறுகையில், "அதிஜீவனம்' வாயிலாக முகேஷ் வெளியிட்டிருந்த கட்டுரைகளைப் பார்த்து அதிகாரிகள் வனத்தில் வாழ்ந்த விளிம்பு நிலை மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்ததோடு பொதுமக்களுக்கும் அத்தகைய மக்களின் நிலைமையை அறிய முடிந்தது' என்றார்.
தலைவர்கள் இரங்கல்... கேமராமேன் முகேஷ் உயிரிழந்ததை அடுத்து கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், அமைச்சர்கள் ஏ.கே.சசீந்திரன், எம்.பி. ராஜேஷ், சஜி செரியான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
யானை தாக்கி மாத்ருபூமி செய்தி சேனல் கேமராமேன் ஏ.வி. முகேஷ் பலியானதற்காக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் அவர் எழுதிவந்தார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று அதில் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.