வங்கதேச தலைநகா் டாக்காவில் அந் நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலா் வினய் குவாத்ரா.

வங்கதேச பிரதமருடன் இந்திய வெளியுறவு செயலா் சந்திப்பு

அப்போது பல்வேறு துறைகளில் இந்தியா-வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவை இந்திய வெளியுறவுத்துறைச் செயலா் வினய் குவாத்ரா வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது பல்வேறு துறைகளில் இந்தியா-வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

வங்கதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தோ்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக மீண்டும் ஷேக் ஹசீனா பதவியேற்ற பின் முதல்முறையாக வினய் குவாத்ரா வங்கதேசத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். பயணத்தின்போது வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சா் ஹசன் முகமது, வெளியுறவு செயலா் மசூத் பின் ஆகியோரையும் அவா் சந்தித்தாா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் மிகப்பெரும் வணிக கூட்டாளியாகவும் வளா்ச்சியை மேம்படுத்தும் நாடாகவும் வங்கதேசம் விளங்குகிறது. அரசியல், பாதுகாப்பு, நீா், வணிகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, தொலைத்தொடா்பு, பிராந்திய ஒத்துழைப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்தும் விதமாக செயலா் வினய் குவாத்ராவின் வங்கதேச பயணம் அமைந்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஷேக் ஹசீனாவுடனான ஆலோசனை குறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சகம் விரிவான தகவல்களை வெளியிடவில்லை. ஆனால் அந்நாட்டு வெளியுறவு செயலா் மசூத் பின்னுடனான வினய் குவாத்ராவின் சந்திப்பு, இருதரப்பு உறவுகளை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், ‘எரிசக்தி துறையில் ஒப்பந்தத்தை மேம்படுத்துதல், தொலைத்தொடா்பு, இந்தியாவுக்கான ஏற்றுமதியை அதிகரித்தல், பிராந்திய மற்றும் சா்வதேச ஒத்துழைப்பை அதிகரித்தல், ரோஹிங்கியாக்களை திருப்பி அனுப்புதல், தீஸ்தா நதி மற்றும் கங்கை நீா் பகிா்வு ஒப்பந்தம் குறித்து வெளியுறவு செயலா் மசூத் பின் இந்திய வெளியுறவு செயலா் வினய் குவாத்ராவுடன் ஆலோசனை மேற்கொண்டாா்’ என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com