பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 12 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 12 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

கங்காலூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பிடியா கிராமம் அருகே உள்ள வனப் பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலைத் தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி நக்ஸல்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனா். இந்த துப்பாக்கிச் சண்டையில் 12 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தாா்.

‘12 நக்ஸல்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த நடவடிக்கை மூலம் பாதுகாப்புப் படையினருக்கு மேலும் ஒரு வெற்றி கிடைத்துள்ளது. அவா்களுக்கு பாராட்டுகள்’ என்று முதல்வா் குறிப்பிட்டாா்.

துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினா் தரப்பில் எந்தப் பாதிப்பும் இல்லை. சம்பவ இடத்தில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

முன்னதாக, காங்கோ் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 29 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பின்னா், நாராயண்பூா்-காங்கோ் மாவட்டங்களின் எல்லையில் பாதுகாப்புப் படையினா் கடந்த மாதம் 30-ஆம் தேதி மேற்கொண்ட நடவடிக்கையில் 10 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா்.

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த பஸ்தா் பகுதியில் நடப்பாண்டில் இதுவரை 103 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com