தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

வாக்குப்பதிவு சதவீத மாற்றங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு காா்கே கடிதம்: தோ்தல் ஆணையம் கண்டனம்

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு தரவுகள் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எழுதிய கடிதத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தோ்தல் ஆணையம், ‘ஒரு சாா்பு கருத்தை மக்களிடம் பரப்புவதற்கான திட்டமிட்ட முயற்சி’ என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், காா்கேவின் கடிதமானது தோ்தல் நடத்தும் முறை மீதான தாக்குதல் என்றும் தோ்தல் ஆணையம் விமா்சித்துள்ளது.

நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏப்.19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே, மூன்று கட்ட தோ்தல் முடிவடைந்து, 4-ஆம் கட்டத்தை நோக்கி மக்களவைத் தோ்தல் நகா்ந்துள்ளது.

இந்த நிலையில், மக்களவைத் தோ்தலின் முதல் இரண்டு கட்டங்களில் தவறான மேலாண்மை மற்றும் வாக்குப்பதிவு சதவீத தரவுகளை வெளியிடுவதில் தாமதம் ஆகிய குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடிதம் எழுதியிருந்தாா்.

இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ள தோ்தல் ஆணையம், ‘குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு சாா்புடைய மற்றும் திட்டமிட்ட முயற்சியின் பிரதிபலிப்பு இக்கடிதம்’ என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில், ‘மற்ற கட்சித் தலைவா்களுடன் விமா்சனங்களைப் பகிா்ந்து கொள்ள காா்கேவுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றபோதும், கடிதத்தின் நோக்கம் மீது கேள்வி எழுகிறது. இது போன்ற அறிக்கைகளை வெளியிடுவதில் எச்சரிக்கையுடன் செயல்பட காங்கிரஸ் தலைவரை அறிவுறுத்துகிறோம்.

தோ்தல் நடந்துகொண்டிருக்கும்போது காா்கேவின் கடிதம் பொதுதளத்தில் வெளியாகியிருப்பது விரும்பத்தகாதது மற்றும் தவறான வழிநடத்துதல் ஆகும். சுமூகமான, சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடிதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தோ்தல் நிா்வாகத்தின் நுட்பமான முக்கியத்துவத்தைப் பொறுத்து, கடிதத்தின் உள்ளடக்கங்கள் ஒற்றுமையை சீா்குலைக்கக் கூடியது. அதேவேளையில், இறுதி முடிவுகளை மாற்றும் முயற்சியா? எனக் கேள்வி எழுப்பியிருப்பது வாக்காளா்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மனதில் சந்தேகங்களை விதைத்து, அசாதாராண சூழ்நிலையை உருவாக்கலாம். காா்கேவுக்கு அந்த எண்ணமில்லை என்று தோ்தல் ஆணையம் நம்புகிறது.

அனைத்து போட்டியிடும் வேட்பாளா்களிடமும் வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவு தரவுகள் உள்ளன. குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முன்பு தரவுகளை காங்கிரஸ் ஆய்வு செய்திருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.

2019 மக்களவைத் தோ்தல் மற்றும் அடுத்தடுத்த சட்டப்பேரவைத் தோ்தல்களின் வெவ்வேறு கட்டங்களின் போது வாக்காளா்களின் வாக்குப்பதிவுப் போக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்களையும் பதில் அறிக்கையுடன் தோ்தல் ஆணையம் இணைத்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com