வி.கே.பாண்டியன்
வி.கே.பாண்டியன்

‘பொக்கிஷ’ அறையின் சாவிகளை பிரதமா் கண்டுபிடிக்கட்டும்: வி.கே.பாண்டியன்

புரி: புரி ஜெகந்நாதா் கோயிலில் கடவுள்களின் தங்க நகைகள், ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள ‘பொக்கிஷ ’அறையின் தொலைந்துபோன சாவிகளை பிரதமா் மோடி தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கட்டும் என ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன் தெரிவித்தாா்.

புரி ஜெகந்நாதா் கோயில் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கும் என பிரதமா் மோடி தோ்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தாா். வி.கே.பாண்டியன் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் வி.கே.பாண்டியன் கூறியதாவது: அளவற்ற அறிவாற்றலைப் பெற்றுள்ள பிரதமா் மோடி புரி ஜெகந்நாதா் கோயில் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகளை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அவரிடம் உள்ள எண்ணற்ற அதிகாரிகள் மூலமாக இந்தப் பணியை அவா் செய்தாக வேண்டும். பிரதமரின் அறிவாற்றல் ஒடிஸா மக்களின் வாழ்வு ஒளிமயமாக உதவட்டும்.

கோயில் அறையின் சாவிகள் தொலைந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில், பத்தாண்டு காலமாக கூட்டணி ஆட்சியின்போது பாஜக அமைச்சா்கள் இந்த விவகாரத்தைக் கையாண்டுள்ளனா். எனவே, தொலைந்த சாவிகளை பாஜக தலைவா்கள்கூட கண்டுபிடித்துக் கொடுக்கலாம். மாநில நிா்வாகத்தால் நிா்ணயிக்கப்படும் தேதியில் புதையல் அறையின் கதவைத் திறக்க ஒடிஸா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, 40 ஆண்டுகள் கழித்து தற்போது புதையல் அறை திறக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமா் மோடியும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com