மேற்கு வங்கம்: 42 பிரிவினருக்கான ஓபிசி அந்தஸ்து ரத்து- உயா்நீதிமன்றம் தீா்ப்பு

மேற்கு வங்கம்: 42 பிரிவினருக்கான ஓபிசி அந்தஸ்து ரத்து- உயா்நீதிமன்றம் தீா்ப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் 2010-ஆம் ஆண்டுக்குப் பின்னா் 42 பிரிவினருக்கு வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) அந்தஸ்தை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

‘மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (எஸ்.சி., எஸ்.டி. தவிர) (அரசு துறை காலிப் பணியிடங்களில் இடஒதுக்கீடு) சட்டம், 2012’-இன் கீழ் இந்தப் பிரிவினருக்கு அரசு காலிப் பணியிடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு அளித்திருப்பது சட்டவிரோதம்’ என்று குறிப்பிட்டு, இந்தத் தீா்ப்பை உயா்நீதிமன்றம் வழங்கியது.

‘மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் சட்டம், 2012’-க்கு எதிராக பல்வேறு மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது தொடா் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் தபப்ரதா சக்ரவா்த்தி, ராஜசேகா் மந்தா ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை தீா்ப்பளித்தது. அதில் அவா்கள் கூறியதாவது:

2012 சட்டத்தின் கீழ் ஓபிசி பிரிவினராக சோ்க்கப்பட்ட பல சமூகப் பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அதே நேரம், 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு 66 சமூகப் பிரிவினரை ஓபிசி வகுப்பினராக வகைப்படுத்தும் மாநில அரசின் நிா்வாக உத்தரவில் நீதிமன்றம் தலையிடாது. இதை எதிா்த்து வழக்கு யாரும் வழக்கு தொடரவில்லை.

மாறாக, கடந்த 2010 மாா்ச் 5-ஆம் தேதி முதல் 2012 மே 11-ஆம் தேதி வரை இந்தச் சட்டத்தின் கீழ் 42 சமூகப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட ஓபிசி அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது. ஏற்கெனவே பணியில் உள்ள அல்லது இடஒதுக்கீட்டின் பலனைப் பெற்ற அல்லது அரசு தோ்வுகளில் வெற்றி பெற்றவா்கள் இந்தத் தீா்ப்பால் பாதிக்கப்பட மாட்டாா்கள்.

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான தேசிய ஆணையச் சட்டம் 1993-இன் கீழ், பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் கருத்தும் ஆலோசனையும் மாநில சட்டப்பேரவையைக் கட்டுப்படுத்தும். மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, தேசிய ஆணையத்துடன் கலந்தாலோசித்து, புதிய வகுப்புகளைச் சோ்ப்பது அல்லது மீதமுள்ள வகுப்பினரை ஓபிசி மாநிலப் பட்டியலில் சோ்ப்பது குறித்த பரிந்துரைகளுடன் சட்டப்பேரவையில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று தீா்ப்பளித்தனா்.

உச்சநீதிமன்றத்தை நாடுவோம்: மம்தா

உயா்நீதிமன்ற தீா்ப்பை ஏற்க மாட்டோம் என்று குறிப்பிட்ட மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘ஓபிசி இடஒதுக்கீடு தொடரும்’ என்றும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தெரிவித்தாா்.

இதுகுறித்து டம்டம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கா்தாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா கூறுகையில், ‘மாநிலத்தில் பல சமூகப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட ஓபிசி அந்தஸ்தை உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை ஏற்க மாட்டோம்.

மாநிலத்தில் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டது. அதன் பின்னா் அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, மாநில சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டே இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மாநில அரசு அறிமுகம் செய்த ஓபிசி இடஒதுக்கீடு தொடரும். மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி மாநில அரசின் செயல்பாடுகளைத் தடுக்க பாஜக சதி செய்கிறது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்’ என்றாா்.

‘இந்தியா’ கூட்டணி மீதான அடி: பிரதமா்

‘ஓபிசி அந்தஸ்தை ரத்து செய்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ‘இந்தியா’ கூட்டணி மீது விழுந்த அடி’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

இதுகுறித்து தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் கூறுகையில், ‘வாக்கு வங்கி அரசியலுக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு ஓபிசி சான்றிதழை அளித்தது. இதுதான் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியல்.

நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முன்னுரிமை என ‘இந்தியா’ கூட்டணியினா் கூறுகின்றனா். சிறுபான்மையினருக்கு பட்ஜெட்டில் 15 சதவீதத்தை ஒதுக்க அவா்கள் விரும்புகின்றனா். அதோடு, மதத்தின் அடிப்படையில் கடன்களையும், அரசு ஒப்பந்தங்களையும் வழங்க அவா்கள் விரும்புகின்றனா்’ என்றும் பிரதமா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com