தேர்தல் ஆணையம் (கோப்புப்படம்)
தேர்தல் ஆணையம் (கோப்புப்படம்)

‘ஜாதி, மதம் சாா்ந்து பிரசாரம் செய்யக் கூடாது’: பாஜக, காங்கிரஸுக்கு தோ்தல் ஆணையம் அறிவுரை

ஜாதி, சமூகம், மொழி மற்றும் மத அடிப்படையில் பிரசாரத்தில் ஈடுபடுவதைத் தவிா்க்குமாறு பாஜக மற்றும் காங்கிரஸை அறிவுறுத்திய தோ்தல் ஆணையம், ‘இந்தியாவின் சமூக-கலாசார சூழலை தோ்தலுக்காக சிதைக்கக் கூடாது’ எனத் தெரிவித்தது.

ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் கடந்த மாதம் நடந்த பிரசார கூட்டத்தில் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி பேசினாா் என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதன்பேரில், பாஜக தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு இந்திய தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், நோட்டீஸுக்கு ஜெ.பி.நட்டா அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த தோ்தல் ஆணையம், அவரையும் அவரது கட்சியின் நட்சத்திர பேச்சாளா்களையும் மத மற்றும் வகுப்புவாத பிரசாரத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டது. மேலும், சமூகத்தைப் பிளவுபடுத்தக்கூடிய பிரசார உரைகளை பாஜக தவிா்க்க வேண்டும் என்றும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோன்று, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் பிரசார பேச்சுகளுக்கு எதிராக பாஜக அளித்த புகாா்களுக்கு பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

காங்கிரஸ் அனுப்பிய பதில்களை நிராகரித்த தோ்தல் ஆணையம், நாட்டின் பாதுகாப்புப் படைகளை அரசியல்படுத்த வேண்டாம் என்றும் ஆயுதப் படைகளின் சமூக-பொருளாதார அமைப்பு குறித்து பிளவுபடுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்றும் அக்கட்சியைக் கேட்டுக்கொண்டது.

‘அரசமைப்புச் சட்டம் அழிக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம்’ என்ற தவறான கருத்துகளை காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளா்களும் வேட்பாளா்களும் வெளிப்படுத்தாததை கட்சித் தலைமை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளின் தலைவா்களும் தங்கள் நட்சத்திர பேச்சாளா்கள் அக்கறையுடன் செயல்பட்டு, பேச்சுகளைத் திருத்தி ஒழுங்கை பராமரிப்பதற்கு முறையான அறிவுறுத்தல்களை வெளியிடுமாறு தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

X
Dinamani
www.dinamani.com