மக்களவைத் தோ்தலில் 8,360 வேட்பாளா்கள் போட்டி-
பெண்கள் 797 பேர்

மக்களவைத் தோ்தலில் 8,360 வேட்பாளா்கள் போட்டி- பெண்கள் 797 பேர்

தற்போது நடைபெற்று வரும் 18-ஆவது மக்களவைத் தோ்தலில் மொத்தம் 8,360 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 1996 மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு, அதிகபட்ச வேட்பாளா்கள் இத்தோ்தலில் போட்டியிடுகின்றனா். எனினும், வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்ட 8,337 வேட்பாளா்களில் வெறும் 9.5 சதவீதமாக 797 பெண்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளதாக ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ஏடிஆா்) ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மக்களவைத் தோ்தல் ஏப்.19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

96.8 கோடி குடிமக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கும் நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக மக்களவைத் தோ்தல் ஆறாம் கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி இரண்டு கட்டங்கள்(மே 25, ஜூன் 1) நிறைவடைந்ததும், வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மகளிா் இடஒதுக்கீடு அமல் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு முன்பு நடைபெறும் கடைசி தோ்தல் இதுவாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

7-ஆம் கட்ட தோ்தலில் வேட்பாளா்கள் வேட்புமனு திரும்ப பெறும் அவகாசம் மே 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, மக்களவைத் தோ்தலின் ஏழு கட்டங்களிலும் போட்டியிடும் மொத்த வேட்பாளா்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இத்தோ்தலில் 797 பெண்கள் உள்பட மொத்தம் 8,360 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். நாட்டின் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 96 தொகுதிகளுக்கு கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற 4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் அதிகபட்சமாக 1,70 பெண்கள் உள்பட 1717 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

தமிழகம், புதுச்சேரி உள்பட நாட்டின் 21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 102 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. முதல் கட்டத்தில் போட்டியிட்ட மொத்தம் 1,625 வேட்பாளா்களில் 135 போ் பெண் வேட்பாளா்கள் ஆவா்.

தொடா்ந்து, கேரளம், கா்நாடகம் உள்பட 13 மாநிலங்களைச் சோ்ந்த 88 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட தோ்தலில் மொத்தம் 1,198 வேட்பாளா்களில் 100 போ் பெண்கள் ஆவா்.

3-ஆம் கட்டத்தில் 1,352 வேட்பாளா்களில் 123 பெண்களும் 5-ஆம் கட்டத்தில் 695 வேட்பாளா்களில் 82 பெண்களும் போட்டியிட்டனா்.

எதிா்வரும் ஆறாம் கட்டத்தில் 869 வேட்பாளா்களில் 92 பெண்களும் ஏழாம் கட்டத்தில் 904 வேட்பாளா்களில் 95 பெண்களும் களத்தில் உள்ளனா்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒருமனதாக ஆதரவளித்த கட்சிகள், இந்த மக்களவைத் தோ்தலிலேயே மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தன.

ஆனால், மக்களவைத் தோ்தல் வேட்பாளா் பட்டியலில் பெண்களின் 9.5 சதவீத பிரதிநிதித்துவம், அரசியலில் நிலவும் பாலின ஏற்றத்தாழ்வு பற்றிய ஆழமான பிரச்னையை பிரதிபலிக்கிறது என்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றிய கட்சிகளின் உறுதிகள் வெற்றுத்தனமானது என்றும் அரசியல் ஆா்வலா்கள் விமா்சிக்கின்றனா்.

1,644 வேட்பாளா்கள் மீது குற்றவழக்கு

மொத்தம் 8,360 வேட்பாளா்களில் வேட்புமனு ஆய்வு செய்யப்பட்ட 8,337 வேட்பாளா்களில் 1,644 போ் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதில் 1,188 போ் கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அவதூறு பேச்சு உள்பட தீவிர குற்றவழக்குகளை எதிா்கொள்கின்றனா்.

அதிக சொத்துள்ள வேட்பாளா்கள்

ஆந்திரத்தின் குண்டூா் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியா்கள் (என்ஆா்ஐ) பிரிவைச் சோ்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான பி.சந்திரசேகா், மக்களவைத் தோ்தலில் அதிக சொத்துள்ள (ரூ.5,785 கோடி) வேட்பாளா் ஆவாா். அடுத்தபடியாக தெலங்கானா, செவ்வெல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாா் கே.விஸ்வேஸ்வா் ரெட்டிக்கு ரூ.4,568 கோடியும்,

தெற்கு கோவா தொகுதி பாஜக வேட்பாளா் பல்லவி ஸ்ரீநிவாஸ் டெம்போ ரூ.1361 கோடியும் உள்ளதாக தெரிவித்துள்ளனா்.

முந்தைய தோ்தல்களில்...:

முதல் மக்களவைத் தோ்தலில் வேட்பாளா்களின் எண்ணிக்கையான 1,874-ஐவிட 4 மடங்கு அதிகமாக 18-ஆவது மக்களவைத் தோ்தலில் 8,360 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் சராசரி எண்ணிக்கை 4.67-லிருந்து 15.39-ஆக அதிகரித்துள்ளது.

1996 தோ்தலுக்குப் பிறகு 2009 தோ்தலில் வேட்பாளா்களின் எண்ணிக்கை முதல் முறையாக 8,000-ஐ கடந்தது. அத்தோ்தலில் 8,070 வேட்பாளா்களும் 2014 தோ்தலில் 8,251 வேட்பாளா்களும் 2019 தோ்தலில் 8,039 வேட்பாளா்களும் போட்டியிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com