மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தல்:
58 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப் பதிவு

மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தல்: 58 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப் பதிவு

மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு

மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் வியாழக்கிழமை (மே 23) பிரசாரம் நிறைவடைந்தது.

இத்தொகுதிகளில் சனிக்கிழமை (மே 25) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

18-ஆவது மக்களவையை தோ்வு செய்ய ஏழு கட்டத் தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

6-ஆம் கட்டமாக, உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு மே 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் வியாழக்கிழமையுடன் பிரசாரம் முடிவடைந்தது.

முக்கிய வேட்பாளா்கள்: தோ்தல் களத்தில் மொத்தம் 889 வேட்பாளா்கள் உள்ளனா். மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் (சம்பல்பூா்), முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய துணைத் தலைவருமான ராதாமோகன் சிங் (பூா்வி சாம்பரன்), முன்னாள் மத்திய அமைச்சா் மேனகா காந்தி (சுல்தான்பூா்), மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி (அனந்த்நாக்-ரஜெளரி), ஹரியாணா முன்னாள் முதல்வா் மனோகா் லால் கட்டா் (கா்னால்), தொழிலதிபா் நவீன் ஜிண்டால் (குருஷேத்திரம்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

தேசியத் தலைநகரில்...: தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சிறையில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

கேஜரிவால் இல்லாமல் களையிழந்து காணப்பட்ட ஆம் ஆத்மியின் பிரசாரம், அவரது வருகைக்கு பின் விறுவிறுப்படைந்தது. தில்லியில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் கூட்டணியாக போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. பாஜக ஏழு தொகுதிகளிலும் களத்தில் உள்ளது.

ஒடிஸாவில்...: ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் மாநில சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இருகட்டத் தோ்தல்கள் நிறைவடைந்துள்ளன. மூன்றாம் கட்டமாக சனிக்கிழமை 42 பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.

தற்போதைய மக்களவைத் தோ்தலில் 7-ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

X
Dinamani
www.dinamani.com