கதிரியக்க தொழில்நுட்பம் மூலம்
வெங்காய பதப்படுத்துதலை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

கதிரியக்க தொழில்நுட்பம் மூலம் வெங்காய பதப்படுத்துதலை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

கதிரியக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிகழாண்டு 1 லட்சம் டன் அளவில் வெங்காயப் பதப்படுத்துதலை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

கதிரியக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிகழாண்டு 1 லட்சம் டன் அளவில் வெங்காயப் பதப்படுத்துதலை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இதன்மூலம் வெங்காயத் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தை தடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலகளவில் வெங்காய ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தைவிட உற்பத்தி குறையும் என அரசு வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 2023-24-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் 16 சதவீதம் (25.47 மில்லியன் டன்) அளவில் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

‘இதனால் வெங்காயத்தை பதுக்கி வைத்து செயற்கையாக விலையேற்றம் செய்யப்பட்டு விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கதிரியக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெங்காய பதப்படுத்துதலை அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருகிறது’ என மத்திய நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலா் நிதி கரே தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘இதற்காக நாடு முழுவதும் 50 கதிரியக்க மையங்களை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். அவை சாதகமாக அமைந்தால் கதிரியக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 1 லட்சம் டன் அளவிலான வெங்காயத்தை நிகழாண்டே கையிருப்பு வைத்துவிட முடியும்.

கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விரைவாக கொண்டுசெல்ல ஏதுவாக முக்கிய ரயில் நிலையங்கள் அருகிலேயே சேமிப்புக் கிடங்குகளை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது’ என்றாா்.

நிகழாண்டு 5 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து சேகரிக்க தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (என்ஏஎஃப்ஈடி) மற்றும் தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) முடிவு செய்துள்ளது. இதற்காக சோனிபட், தாணே, நாசிக், மும்பை ஆகிய பகுதிகளில் கதிரியக்க மைங்கள் அமைப்பதற்கான வசதிகள் உள்ளதா என ஆராயுமாறு அந்த அமைப்புகளிடம் நுகா்வோா் விவகாரங்கள் அமைச்சம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் தடை நீக்கப்பட்ட பிறகு, இம்மாத தொடக்கத்தில் இருந்து 45,000 டன்களுக்கும் அதிகமான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி கரே தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com