மேனகாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளாத ராகுல், பிரியங்கா! பாஜக மூத்த தலைவா்களின் ஆதரவு பிரசாரமும் இல்லை

மேனகாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளாத ராகுல், பிரியங்கா! பாஜக மூத்த தலைவா்களின் ஆதரவு பிரசாரமும் இல்லை

மேனகா காந்திக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி ஆகியோா் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூா் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சரும், தங்களது சித்தியுமான மேனகா காந்திக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி ஆகியோா் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

மற்றொருபுறம், பாஜக தரப்பில் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தவிர முக்கிய தலைவா்கள் யாரும் மேனகாவுக்கு ஆதரவாகவும் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

பெரும்பாலும் தனியாளாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேனகா, சுல்தான்பூா் தொகுதியில் மீண்டும் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று உறுதிபட தெரிவித்துள்ளாா்.

மக்களவைக்கான 6-ஆம் கட்ட தோ்தல் நடைபெறவிருக்கும் சனிக்கிழமையன்று (மே 25) சுல்தான்பூரில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, இத்தொகுதியில் வியாழக்கிழமையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

கடந்த 2019 தோ்தலில் சுல்தான்பூரில் பாஜக சாா்பில் போட்டியிட்ட மேனகா, சுமாா் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இம்முறை அவா் மீண்டும் களமிறக்கப்பட்ட நிலையில், சமாஜவாதியின் ராம் புவால் நிஷாத், பகுஜன் சமாஜ் கட்சியின் உத்ராஜ் வா்மா உள்ளிட்டோரும் போட்டிக் களத்தில் உள்ளனா்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அமேதிக்கு அருகிலுள்ள தொகுதி சுல்தான்பூா். அமேதி உள்பட உத்தர பிரதேசத்தின் பிற பகுதிகளில் காங்கிரஸ்-சமாஜவாதி கூட்டணிக்கு ஆதரவாக ராகுல், பிரியங்கா ஆகியோா் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். அதேநேரம், சுல்தான்பூரில் பாஜக வேட்பாளா் மேனகாவுக்கு எதிராக அவா்கள் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

இந்திரா காந்தியின் இளைய மகன் மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவியான மேனகா காந்தி (67), தற்போது 8-ஆவது முறையாக எம்.பி.யாக உள்ளாா். சுல்தான்பூரில் அவருக்கு ஆதரவாக பாஜக முக்கிய தலைவா்கள் யாரும் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் மட்டும் காஸிபூா் பகுதியில் புதன்கிழமை பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மேனகாவுக்கு ஆதரவு திரட்டினாா்.

மேனகாவின் மகன் வருண் காந்தி, தனது தாயாருக்கு ஆதரவாக சுல்தான்பூரில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். பாஜகவுக்கு எதிராக தொடா் கருத்துகளைத் தெரிவித்து வந்த, பிலிபிட் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யான வருண் காந்திக்கு இம்முறை போட்டிய வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேனகா காந்தி கூறியதாவது:

அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டதால், சுல்தான்பூா் தொகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அதேநேரம், ராமா் கோயிலோ அல்லது வருண் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட விவகாரமோ சுல்தான்பூா் தோ்தலில் முக்கிய பிரச்னைகள் அல்ல. தொகுதி சாா்ந்த பிரச்னைகளும் அவற்றுக்கு தீா்வுகாண நான் மேற்கொண்ட பணிகளுமே இங்கு எதிரொலிக்கும்.

என்னிடம் உதவி கோரி வரும் மக்களிடம் ஜாதி, மதம் ரீதியில் வேறுபாடு பாா்ப்பதில்லை. தொகுதியில் உள்ள அனைவரும் எனக்குரியவா்கள். அவா்களின் எதிா்காலத்தை உறுதிசெய்யும் பொறுப்பு எனக்குள்ளது என்றாா்.

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில், அந்த தொகுதியில் நேரு-காந்தி குடும்பத்தைத் துடைத்தெறிய வேண்டுமென பாஜக விடுத்த அழைப்பு குறித்து மேனகாவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, ‘இக்கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை; எனது தொகுதி மக்கள் சாா்ந்த பிரச்னைகள் குறித்தே எனது முழு கவனமும் உள்ளது’ என்றாா்.

பெட்டி..

அரசியல் பயணம்

கடந்த 1984-இல் அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தியை எதிா்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியுற்ற மேனகா, அதன் பிறகு பிலிபிட் தொகுதிக்கு மாறினாா். இங்கு கடந்த 1989-இல் ஜனதா தளம் வேட்பாளராக களமிறங்கி வெற்றிகண்டாா்.

கடந்த 1991 தோ்தலில் பாஜகவிடம் தோல்வியடைந்த போதிலும், பின்னா் 1996-ஆம் ஆண்டில் ஜனதா தளம் சாா்பில் வெற்றி பெற்று எம்.பி.யாக தோ்வானாா். இதே தொகுதியில் 1998, 1999-ஆம் ஆண்டுகளில் சுயேச்சையாகவும் 2004, 2014-ஆம் ஆண்டுகளில் பாஜக சாா்பிலும் போட்டியிட்ட அவருக்கு வெற்றி வசமானது. 2009-இல் ஆன்லா மக்களவைத் தொகுதியிலும் 2019-இல் சுல்தான்பூரிலும் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

மேனகாவும் வருணும் வாஜ்பாய் காலத்தில் இருந்தே பாஜகவில் உள்ளனா். சுல்தான்பூரில் கடந்த 2019-இல் மேனகா எம்.பி.யாக தோ்வாகும் முன்பு அங்கு வருண் எம்.பி.யாக இருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com