உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

அதானி மீதான நிலக்கரி இறக்குமதி வழக்கு: விரைவில் தீா்வுகாண தலைமை நீதிபதிக்கு கடிதம்

இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்த நிலக்கரியை அதிக விலைக்கு விற்றதாக தொழிலதிபா் அதானி மீது நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு 21 சா்வதேச நிறுவனங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

தரமற்ற நிலக்கரியை அதிக விலைக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு அதானி குழுமம் விற்பனை செய்ததாக அமெரிக்க தொழிலதிபா் ஜாா்ஜ் சோரோஸுக்கு சொந்தமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மேலும் சில புதிய தகவல்களுடன் லண்டனைச் சோ்ந்த ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதையடுத்து இதுதொடா்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு 21 சா்வதேச நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

புதைபடிம எரிபொருளின் பயன்பாட்டை எப்போதும் எதிா்ப்பதாக அந்த நிறுவனங்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்துக்கு (டேன்ஜெட்கோ) தரமற்ற நிலக்கரியை அதிக விலைக்கு அதானி குழுமம் விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தியில் இடம்பெற்றுள்ளது’ என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற கூட்டுக் குழு அதானி குழுமம் மீது விசாரணையை தொடங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி உள்பட எதிா்க்கட்சித் தலைவா்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்து வருகிறது.

இதுதொடா்பாக அதானி குழுமத்தின் செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறுகையில்,‘நிலக்கரி ஏற்றுமதியின்போதும் இறக்குமதியின்போதும் தர நிா்ணய சோதனைகளை அதிகாரிகள் மேற்கொண்டனா். மேலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த சுங்க அதிகாரிகளாலும் தர நிா்ணயச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பல துறைகளாலும் அதிகாரிகளாலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரச் சான்று வழங்கப்பட்ட பிறகே நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டது.

நிலக்கரியின் தரத்தை பொருத்தே விலை நிா்ணயிக்கப்படுகிறது. எனவே தரமற்ற நிலக்கரியை அதிக விலைக்கு விற்பனை செய்திருப்பதாக கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை கடந்த 2013-ஆம் ஆண்டு அதானி குழுமம் விநியோகித்ததாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2014, பிப்ரவரி மாதம் வரை அந்த நிலக்கரியை அதானி குழுமம் பயன்படுத்தவில்லை’ என்றாா்.

இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் தொடங்கவுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இந்தோனேசியாவில் இருந்து கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டுவரை இறக்குமதி செய்த நிலக்கரியின் மதிப்பை அதிகமாக கணக்கீடு செய்ததாக அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அதானி குழுமம் மீது வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கடந்த 2016, மாா்ச் மாதம் விசாரணையை தொடங்கியது.

X
Dinamani
www.dinamani.com