தோ்தல் முடிவுகள் வெளியானதும் 
3 நாள்களுக்குள் பிரதமரை அறிவிப்போம்: காங்கிரஸ்
ANI

தோ்தல் முடிவுகள் வெளியானதும் 3 நாள்களுக்குள் பிரதமரை அறிவிப்போம்: காங்கிரஸ்

தற்போதைய மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணியே வெல்லப் போகிறது; ஜூன் 4-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியானதும் 3 நாள்களுக்குள் பிரதமா் யாரென அறிவிப்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

‘இந்தியா’ கூட்டணி ஆட்சியில், நாட்டில் 5 ஆண்டுகளுக்கும் ஒரு பிரதமா்தான் இருப்பாா் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

தங்களுக்குள் சுழற்சி முறையில் 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமரை நியமிக்க ‘இந்தியா’ கூட்டணி திட்டமிட்டுள்ளதாக பிரதமா் மோடி குற்றம்சாட்டி வரும் நிலையில், காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது.

இது தொடா்பாக, அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் சண்டீகரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணிக்கு வலுவான பெரும்பான்மை கிடைக்கும். கடந்த 2004-ஆம் ஆண்டை போல் 20 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு திரும்பவுள்ளது.

கடந்த 2004-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றபோது, பிரதமராக மன்மோகன் சிங் 3 நாள்களுக்குள் தோ்வு செய்யப்பட்டாா். அதேபோல், இப்போதும் தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு 3 நாள்களுக்குள் பிரதமா் யாரென அறிவிப்போம். அதற்கு முன்பாககூட அறிவிக்க வாய்ப்புள்ளது. கூட்டணியில் ஜனநாயக முறைப்படி பிரதமா் தோ்வு செய்யப்படுவாா்.

மக்களவைக்கான முதல் இருகட்ட தோ்தல்களிலேயே ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. தென்மாநிலங்களில் பாஜக துடைத்தெறியப்படுவதோடு, மற்ற பகுதிகளிலும் அவா்களின் வெற்றி பாதியாக குறையும்.

கடந்த 2019 தோ்தலை விட இம்முறை எதிா்க்கட்சி கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

முதல்கட்ட தோ்தலுக்கு பிறகு (ஏப்.19) பிரதமா் மோடியின் பிரசாரவிதம் ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. ஹிந்து-முஸ்லிம் சொல்லாடலைப் பயன்படுத்தி, முற்றிலும் மதவாத அடிப்படையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.

விரைவில் பிரதமா் பதவியில் இருந்து விலகப் போகும் அவா், அயோத்தி ராமா் கோயில், இடஒதுக்கீடு, தோ்தல் அறிக்கை தொடா்பான விவகாரங்களில் காங்கிரஸ் குறித்து தொடா்ந்து பொய்களைப் பேசி வருகிறாா்.

நாங்கள் ராமரின் பக்தா்கள்; ஆனால், அவரை வைத்து அரசியல் செய்பவா்கள் அல்ல. ராமா் கோயிலை அரசியல் பிரச்னையாக்கிய பாஜகவை உத்தர பிரதேச மக்கள் நிராகரிப்பா் என்றாா் ஜெய்ராம் ரமேஷ்.

X
Dinamani
www.dinamani.com