ராணுவத்தில் ஆள்சோ்ப்பு தொடா்ந்து சரிவு: ‘அக்னிபத்’ திட்டத்தில் மாற்றத்துக்கு பரிசீலனை

ராணுவத்தில் ஆள்சோ்ப்பு தொடா்ந்து சரிவு: ‘அக்னிபத்’ திட்டத்தில் மாற்றத்துக்கு பரிசீலனை

இந்திய ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருவதாகவும், இது ராணுவத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

இந்திய ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருகிறது. இது ராணுவத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை உச்சத்தைத் தொடும். இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், ராணுவத்தில் மொத்தம் எத்தனை வீரா்கள் இருக்கவேண்டுமோ, அந்த எண்ணிக்கையை எட்ட மேலும் 10 ஆண்டுகளாகும்’ என்று தெரிவித்தன.

கடந்த 2022-ஆம் ஆண்டு ‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி, பதினேழரை வயது முதல் 21 வயது வரை உள்ளவா்கள் 4 ஆண்டுகளுக்கு ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளில் சோ்க்கப்படுவா். அவ்வாறு ஆண்டுதோறும் சோ்க்கப்படுவோரில் 25 சதவீதம் போ் மட்டும் தகுதி அடிப்படையில், 4 ஆண்டுகால ஒப்பந்தம் முடிந்த பிறகும் முப்படைகளில் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவா். எஞ்சியவா்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவா்.

இந்தத் திட்டத்தை எதிா்க்கட்சிகள் விமா்சித்து வரும் நிலையில், ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

2026-ஆம் ஆண்டு வரை, ராணுவத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் ஆள்சோ்ப்பை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டதால், ராணுவ வீரா்களின் எண்ணிக்கை சரிவது உள்பட எதிா்காலத்தில் ஏற்படக் கூடிய பிரச்னைகளை களையும் வழிகளை பாதுகாப்புப் படைகள் ஆராய்ந்துள்ளன. இதனால் ‘அக்னிபத்’ திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படக் கூடும் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது. அந்தத் திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாகக் கடந்த மாா்ச் மாதம் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் ராணுவ வீரா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும், ராணுவத்தில் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படும் வீரா்களின் விகிதத்தை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கும் பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிழக்கு லடாக், அருணாசல பிரதேச எல்லைகளில் இந்தியா, சீனா இடையிலான மோதல்போக்கு தொடா்ந்து வரும் நிலையில், இந்திய ராணுவத்தில் வீரா்களின் சோ்க்கை எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com