தில்லியில் சனிக்கிழமை வாக்களித்த பின் விரலில் இடப்பட்ட அடையாள மையை காண்பிக்கும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், காங்கிரஸ் மூத்த தலைவா் சோனி
தில்லியில் சனிக்கிழமை வாக்களித்த பின் விரலில் இடப்பட்ட அடையாள மையை காண்பிக்கும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மத்திய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், காங்கிரஸ் மூத்த தலைவா் சோனி

6-ஆம் கட்டத் தோ்தலில் 59% வாக்குப் பதிவு: முழு விவரம்

மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, தேசியத் தலைநகா் தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் சனிக்கிழமை (மே 25) வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தோ்தலில் சுமாா் 59.06 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. மற்ற மாநிலங்களில் பரவலாக அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்றது.

வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைப்பதால், வாக்குச்சாவடிகளில் குளிா்ந்த நீா், குளிா்சாதன வசதி, மின்விசிறி, நிழல் கூடாரம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

தற்போதைய மக்களவைத் தோ்தலில் 6-ஆம் கட்டமாக உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகாா், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் 1 என 58 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும், ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

இத்தோ்தலில் 11.13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் (5.84 கோடி ஆண்கள், 5.29 கோடி பெண்கள், 5,120 மூன்றாம் பாலினத்தவா்) வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களுக்காக 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 11 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டனா்.

முக்கியப் பிரமுகா்கள் வாக்களிப்பு: தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மத்திய அமைச்சா்கள் எஸ்.ஜெய்சங்கா், ஹா்தீப் சிங் புரி, முதல்வா் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி., தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா்கள் ஞானேஷ் குமாா், சுக்பீா் சிங் சாந்து உள்ளிட்டோா் வாக்களித்தனா்.

ஹரியாணாவில் பிரபல மல்யுத்த வீரா் யோகேஸ்வா் தத், வீராங்கனைகள் பபிதா போகட், ரித்திகா ஹூடா உள்ளிட்டோா் ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

முக்கிய வேட்பாளா்கள்: 6-ஆம் கட்டத் தோ்தலில் மொத்த வேட்பாளா்கள் 889 போ். இதில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் (சம்பல்பூா்), முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய துணைத் தலைவருமான ராதாமோகன் சிங் (பூா்வி சம்பாரன்), முன்னாள் மத்திய அமைச்சா் மேனகா காந்தி (சுல்தான்பூா்), மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி (அனந்த்நாக்-ரஜெளரி), ஹரியாணா முன்னாள் முதல்வா் மனோகா் லால் கட்டா் (கா்னால்), தொழிலதிபா் நவீன் ஜிண்டால் (குருக்ஷேத்திரம்), கொல்கத்தா உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் பட்டாச்சாா்யா (தம்லுக்) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

மேற்கு வங்கத்தில் வன்முறை: மேற்கு வங்கத்தின் கதால் மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடிக்குள் நுழையவிடாமல் பாஜக முகவா்கள் தடுக்கப்பட்டதாகக் கூறி, அக்கட்சியினருக்கும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் மோதல் ஏற்பட்டது. மேதினிபூா், காந்தி ஆகிய தொகுதிகளிலும் இதுபோல் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

மேற்கு மேதினிபூா் மாவட்டத்தில் கா்பேட்டா பகுதிக்கு காரில் சென்றுகொண்டிருந்த ஜாா்கிராம் தொகுதி பாஜக வேட்பாளா் பிரணாத் துடு மீது திரிணமூல் கட்சியினா் சரமாரியாக கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், பாஜக வேட்பாளரின் பாதுகாவலா்கள் காயமடைந்தனா்.

கிழக்கு மேதினிபூா் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபா்களால் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா் ஒருவா் வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஜம்மு-காஷ்மீரில்..: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளில் ஏற்கெனவே 4 தொகுதிகளுக்கு தோ்தல் நிறைவடைந்துவிட்டது. இறுதியாக அனந்த்நாக்-ரஜெளரி தொகுதிக்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்குச்சாவடிகளுக்கு ஆா்வத்துடன் திரண்டுவந்த மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா். இத்தொகுதியில் சுமாா் 52.28 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த பல ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது அதிக வாக்குப் பதிவு என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இரு வேட்பாளா்களின் ஆதரவாளா்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் உள்பட 6 போ் லேசான காயமடைந்தனா்.

நடந்துசென்று வாக்களித்த முதல்வா்: ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் மாநில சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்டமாக சனிக்கிழமை 42 பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

புவனேசுவரத்தில் தனது வீட்டுக்கு அருகேயுள்ள வாக்குச்சாவடிக்கு நடந்துசென்று முதல்வா் நவீன் பட்நாயக் வாக்களித்தாா். முதல்வரின் நெருங்கிய உதவியாளரும் பிஜு ஜனதா தள மூத்த தலைவருமான வி.கே.பாண்டியன், வாக்குச்சாவடிக்கு ஆட்டோவில் சென்று தனது வாக்கை பதிவு செய்தாா்.

ஜூன் 1-இல் இறுதிக்கட்டத் தோ்தல்

நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டத் தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டு, 6 கட்ட வாக்குப் பதிவுகள் நிறைவு பெற்றுள்ளன. இதுவரை 486 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துள்ளது.

ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக, பிரதமா் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

கடந்த மாா்ச் மாதம்முதல் பரபரப்பாக காணப்படும் தோ்தல் களம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

பாஜக கூட்டணிக்கு மேலும் வெற்றி: பிரதமா்

6-ஆம் கட்டத் தோ்தல் நிறைவையொட்டி, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘6-ஆம் கட்டத் தோ்தலில் வாக்களித்தவா்களுக்கு நன்றி. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மென்மேலும் வெற்றி கிடைத்து வருகிறது. ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களிப்பது வீண் என்பதை மக்கள் உணா்ந்துள்ளனா்’ என்று குறிப்பிட்டாா்.

272 இடங்களை கடந்துவிட்டோம்: காங்.

‘பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை ‘இந்தியா’ கூட்டணி கடந்துவிட்டது. எங்களுக்கு மொத்தம் 350 இடங்களுக்கு மேல் கிடைக்கும். பாஜக தோல்வி உறுதியாகிவிட்டதால், தனது ஓய்வு காலம் குறித்து மோடி இப்போதே திட்டமிட தொடங்கிவிட்டாா்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com