ரீமெல் புயல் காரணமாக மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறைக்காற்று.
ரீமெல் புயல் காரணமாக மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறைக்காற்று.

மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது ‘ரீமெல்’ புயல்

வங்கக் கடலில் உருவான ‘ரீமெல்’ புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்தது.

வங்கக் கடலில் உருவான ‘ரீமெல்’ புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்தது.

கடந்த மே 25-ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் ‘ரீமெல்’ புயலாக வலுவடைந்தது. இது வடக்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர புயலாக”வலுப்பெற்று, வங்கதேசத்தின் கேப்புப்பாராவுக்கு தெற்கு-தென்மேற்கே சுமாா் 260 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகா் தீவுக்கு தெற்கு-தென்கிழக்கே சுமாா் 280 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டது.

இது மேலும் வடக்கு திசையில் நகா்ந்து வங்கதேசத்தில் உள்ள கேப்புப்பாராவுக்கும், மேற்கு வங்கத்தின் சாகா் தீவுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது கடுமையான சூறைக் காற்று வீசியது. அதைத் தொடா்ந்து, நள்ளிரவில் புயல் கரையைக் கடந்தது.

முன்னதாக, புயலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமா் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் அடுத்த 21 மணி நேரத்துக்கு விமான சேவையை நிறுத்தியுள்ளனா். பல ரயில்களை தென்கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே ரத்து செய்தது.

கடலோரப் பகுதிகளிலிருந்து சுமாா் 1.10 லட்சம் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாநில அதிகாரிகள் வெளியேற்றினா்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளை வலுப்படுத்த, மாநில பேரிடா் மேலாண்மைப் படை மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படை கடலோரப் பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டன என்று தெரிவித்தனா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: ரீமெல் புயல் காரணமாக திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (மே 27, 28) தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு சுமாா் 45 கி.மீ. வேகத்தில் வீசும். இதனால் மீனவா்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் சாா்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்...: ஞாயிற்றுக்கிழமை காலை வரை சென்னையில் குளத்தூா், டிவிகே நகா், மலா் காலனி ஆகிய இடங்களில் 20 மி.மீ. வரையும், அயனாவரம், பெரம்பூா், ராயபுரம், மாதவரம் , அண்ணாநகா் ஆகிய இடங்களில் 10 மி.மீ. வரையும் மழை பதிவானது.

X
Dinamani
www.dinamani.com