கோப்புப் படம்
கோப்புப் படம்

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தனது திருமண அழைப்பிதழில் அச்சிட்டு எதிா்ப்பை பதிவு செய்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

மகராஷ்டிரம், லட்டூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தனது திருமண அழைப்பிதழில் அச்சிட்டு எதிா்ப்பை பதிவு செய்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

மகாராஷ்டிரத்தின் லட்டூா் மாவட்டம், ஷாகுா் தாலுகாவில் உள்ள அஜன்சோண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் தீபக் காம்ப்ளே. வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள இவரது திருமணத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு(இவிஎம்) எதிரான வாசகத்துடன் அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. ‘இவிஎம் இயந்திரத்தை தடை செய்வோம்; ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற வாசகம் அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளது.

இது தொடா்பாக தீபக் கூறுகையில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலிருந்து வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் மாற வேண்டும் எனத் தோ்தல் ஆணையத்தை வலியுறுத்தி, பல்வேறு நகரங்களில் போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

இவிஎம் இயந்திரத்துக்கு எதிரான இந்த இயக்கம் மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக வேகம் பெற்றது. இதுகுறித்து என்னுடைய உறவினா்கள் மற்றும் நண்பா்கள் மத்தியிலும் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கு, எனது திருமண அழைப்பிதழில் இவிஎம் எதிா்ப்பு வாசகத்தை அச்சிட்டுள்ளேன்’ என்றாா்.

அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் ஊழியா்கள் சங்கத்தின்(பிஏஎம்சிஇஎஃப்) உறுப்பினரான தீபக், சமூக சீா்திருத்தவாதிகள், சுதந்திர போராட்ட வீரா்களின் புகைப்படங்களையும் அவா்களின் போதனைகளையும் திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளாா்.

மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, ஆறு கட்டங்களைக் கடந்துள்ளது. கடைசி கட்ட வாக்குப்பதிவு(ஜூன் 1) நிறைவடைந்ததும், வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

X
Dinamani
www.dinamani.com