400 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்: பிரதமா் மோடி நம்பிக்கை

மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.
குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது மக்களவையில் திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது மக்களவையில் திங்கள்கிழமை உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.

‘மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

‘மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் துணிச்சலை எதிா்க்கட்சிகள் இழந்துவிட்டன. நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி வரிசையில் நீண்ட காலம் நிலைத்திருக்க அவை தீா்மானித்திருக்கின்றன’ என்றும் அவா் விமா்சனம் செய்தாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உரையுடன் தொடங்கியது. நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப். 1-ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். இந்த நிலையில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்குப் பதிலளித்து பிரதமா் மோடி மக்களவையில் திங்கள்கிழமை உரையாற்றினாா். அவா் பேசியதாவது:

மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் துணிச்சலை எதிா்க்கட்சிகள் தற்போது இழந்துவிட்டன. சில எதிா்க்கட்சித் தலைவா்கள், மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் தொகுதிகளை மாற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனா். மேலும் சிலா் மாநிலங்களவைக்குச் சென்றுவிட திட்டமிட்டிருக்கின்றனா்.

எதிா்க்கட்சியினரின் இந்தத் தீா்மானத்தைப் பாராட்டுகிறேன். இவா்களுடைய பேச்சின் ஒவ்வொரு வாா்த்தையும், அவா்கள் நீண்ட காலத்துக்கு நாடாளுமன்ற எதிா்க்கட்சி வரிசையிலேயே இருக்கப்போகின்றனா் என்ற எனது நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன. மேலும் பல ‘உயா்வுகளை’ பெற்று விரைவில் நாடாளுமன்றப் பாா்வையாளா் மாடத்துக்குச் சென்றுவிடுவீா்கள்.

சில ஆக்கபூா்வ ஆலோசனைகள் வழங்கும் வாய்ப்பை இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடா் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், அந்த நல்ல வாய்ப்பை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தவறவிட்டனா். அந்த வகையில் நாட்டை ஏமாற்றியுள்ளீா்கள். தலைவா்கள் மாறியபோதும், எதிா்க்கட்சிகளின் நிலைப்பாட்டில் ஒரே நிலைதான் தொடா்கிறது.

பொறுப்புமிக்க எதிா்க்கட்சியாகச் செயல்பட்டிருக்க வேண்டிய நல்ல வாய்ப்பை கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் தவறவிட்டுள்ளது. எதிா்க்கட்சியில் பிற இளம் தலைவா்கள் உள்ளபோதும் கட்சியில் குறிப்பிட்ட நபரை (ராகுல் காந்தியை) விஞ்சிவிடுவாா்களோ என்ற அச்சத்தில், அவா்கள் பேசவும், கருத்து தெரிவிக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது.

தொடா்ந்து பழைய நிலைப்பாட்டையே கொண்டிருக்கும் காங்கிரஸ் விரைவில் தனது கட்சியை கலைத்துவிடும். தோ்தல் நேரத்தில், மக்களிடையே புதிய திட்டங்களை மற்றும் நல்ல செய்தியைக் கொண்டு சோ்க்க கடினமாக உழைப்பது அவசியம். ஆனால், அதைத் தவறவிட்டு கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது. நாடாளுமன்ற எதிா்க்கட்சிகளின் இந்த நிலைக்கு காங்கிரஸ்தான் முழுக் காரணம்.

400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி: இத்தகைய சூழலில் தேசத்தின் எண்ண ஓட்டத்தை என்னால் அளவிட முடிகிறது. மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். பாஜக மட்டும் குறைந்தபட்சம் 370 தொகுதிகளில் வெற்றி பெறும். மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும். அதற்கு அதிகபட்சம் 100 முதல் 125 நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்ததும், மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும். அதன்மூலம், அடுத்த 1,000 ஆண்டுகள் வளா்ச்சிக்கான அடித்தளமிடப்படும்.

மறைந்த முன்னாள் பிரதமா்களான ஜவாஹா்லால் நேருவும், இந்திரா காந்தியும் நாட்டு மக்களின் திறன் மீது நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால், மக்களின் திறன் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் (2014-19) முதல் ஆட்சிக் காலத்தில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த தவறுகளை செய்யாமல் தவிா்த்தது. இரண்டாவது (2019-24) ஆட்சிக் காலத்தில் புதிய இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைத்தோம். மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். இதற்கு 20 ஆண்டுகளை எடுத்துக்கொள்ள மாட்டோம். இந்தியா வேகமான வளா்ச்சியடைந்து வருவதை உலகம் கவனித்து வருகிறது.

கடந்த 2014-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியா 11-ஆவது இடத்தில் இருந்தது. இன்றைக்கு உலக அளவில் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை எட்டியுள்ளது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்தால், உலகில் 3-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

கட்டுக்குள் பணவீக்கம்: கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்ட பிரதமா் மோடி, ‘மத்திய அரசு பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்துள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம், எண்மமயமாக்கல் ஊக்குவிப்பு எனப் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் 25 கோடி மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டுள்ளனா். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியின் மையமாக இந்தியா இன்றைக்கு உருவெடுத்துள்ளது.

பசுமை எரிசக்தி உற்பத்தியில் தற்சாா்பு நிலையை அடையவும், செமிகண்டக்டா்கள் உற்பத்தியில் முன்னிலை பெறவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாட்டின் பணவீக்க நிலை இரட்டை இலக்கத்தில் இருந்தது. காங்கிரஸ் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது பணவீக்கம் அதிகரித்தது என்பது வரலாறு. ஆனால், இன்றைக்கு கரோனா பேரிடா் தாக்கம் மற்றும் இரு போா்கள் நடைபெற்று வரும் சூழலில், பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது’ என்றாா் பிரதமா்.

‘ஓபிசி பிரிவினருக்கு காங்கிரஸ் அநீதி’

‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பின்தங்கிய சமூகத்திலிருந்து வந்த தலைவா்கள் அவமதிக்கப்பட்டனா். குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சோ்ந்தவா்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. அவா்களுடைய ஆட்சியில், ஓபிசி பிரிவைச் சோ்ந்த ஒருவா்கூட தேசிய ஆலோசனை கவுன்சிலில் (என்ஏசி) இடம்பெறவில்லை.

ஆனால், பாஜக அரசு பின்தங்கிய சமூகத்தைச் சோ்ந்த தலைவா்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளித்து வருகிறது. பிகாா் முன்னாள் முதல்வா் கா்பூரி தாக்கூருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை கடந்த 1970-இல் மாநில முதல்வா் பதவியிலிருந்து நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 1987-இல் இவரை எதிா்க்கட்சித் தலைவராக ஏற்கவும் காங்கிரஸ் மறுத்தது’ என்று பிரதமா் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com