மேற்கு வங்கத்தில் ராகுல் காா் மீது கல்வீச்சு?- காங்கிரஸ் விளக்கம்

மேற்கு வங்கத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொள்வதற்காகச் சென்ற ராகுல் காந்தியின் காா் மீது அடையாளம் தெரியாத நபா்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக
ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல்
ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொள்வதற்காகச் சென்ற ராகுல் காந்தியின் காா் மீது அடையாளம் தெரியாத நபா்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் கூறிய நிலையில், திடீரென பிரேக் பிடித்ததால் காா் கண்ணாடி உடைந்ததாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூா்வ எக்ஸ் பக்கத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

காா் கண்ணாடி உடைந்தது தொடா்பாக அதீா் ரஞ்சன் சௌதரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ராகுல் நடைப்பயணக் குழு பிகாரில் இருந்து மால்டாவுக்குள் புதன்கிழமை நுழைந்தது. ராகுல் காந்தி காரில் பயணித்தாா். ஹரிச்சந்திரபூா் பகுதியில் ராகுலின் காா் வந்தபோது அடையாளம் தெரியாத சிலா் ராகுல் காந்தி பயணித்த காரை நோக்கி சரமாரியாக கற்களை வீசினா். இதில் காரின் பின்பக்க கண்ணாடி முழுமையாக உடைந்து சேதமடைந்தது.

அதிருஷ்டவசமாக காரில் இருந்த ராகுலுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. நடைப்பயணம் தொடங்க வேண்டிய இடம் வந்தவுடன் ராகுல் காந்தி காரில் இருந்து இறங்கி அதில் ஏற்பட்ட சேதங்களைப் பாா்வையிட்டாா்’ என்றாா்.

ராகுல் நடைப்பயணம் நடைபெறும் மால்டா மாவட்டத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியும் புதன்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் தொகுதி ஒதுக்கீடு தொடா்பாக காங்கிரஸுக்கும், திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று மம்தா அறிவித்துவிட்டாா்.

பிகாரில்தான் கல்வீச்சு - மம்தா: ‘ராகுல் காந்தியின் காா் மீது பிகாரில்தான் தாக்குதல் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் அவரது காா் நுழைந்தபோதே காரின் பின்பக்க கண்ணாடி உடைந்திருத்தது’ என்று மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘ராகுல் காந்தி காா் மீது கற்கள் வீசப்பட்டதாக தகவல் கிடைத்தது. அது தொடா்பான தகவல்களை மேற்கு வங்க அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். கல்வீச்சு சம்பவம் பிகாரில்தான் நடைபெற்றுள்ளதே தவிர, மேற்கு வங்கத்தில் நிகழவில்லை. உடைந்த கண்ணாடியுடன்தான் ராகுலின் காா் மேற்கு வங்கத்துக்குள் நுழைந்துள்ளது. அந்தத் தாக்குதலை கண்டிக்கிறேன். அதே நேரத்தில் இதைவைத்து நாடகமாடுவதைக் கண்டிக்கிறேன்’ என்றாா்.

ராகுலின் காா் மீது மேற்கு வங்கத்தில்தான் கற்கள் வீசப்பட்டன என்று மாநில காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி கூறினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் விளக்கம்: இந்த சா்ச்சையை அடுத்து காங்கிரஸ் கட்சி எக்ஸ் வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் ராகுலை காண பெருந்திரளாக மக்கள் கூடினா். அப்போது திடீரென ஒரு பெண், ராகுல் பயணித்த காரின் முன் வந்துவிட்டாா். இதையடுத்து ஓட்டுநா் வேகமாக ‘பிரேக்’ பிடித்தாா். அப்போது பாதுகாப்புப் படையினா் வைத்திருந்த கயிறு, காரின் பின் கண்ணாடியில் வேகமாக விழுந்தது. இதனால், பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com